Sunday, July 26, 2015

தெய்வம் எங்கே?
.பாலசுப்ரமணியன் 

சர்வ மங்கள மாங்கல்யே.." மனோகரியின் உதடுகள் இசை பாடிக்கொண்டிருந்தன. அதை  அந்த  கோமதி அம்மன் கேட்டுகொண்டிருந்தாளோ  இல்லையோ, அந்த குருக்களுக்குக்  காதில் விழுந்தது.

 "க்ஷேமமா இரும்மா. அம்பாள் அனுக்ரகத்திலே நினைத்ததெல்லாம் நடக்கட்டும்". வட மொழியுடன்  இணைந்த  அவர் உச்சரிப்பு அழகாக  இருந்தது

குங்குமத்தை பெற்றுக்கொண்ட மனோ பிரகாரத்தை  சுற்றி வரக் கிளம்பினாள்.

"நில்லும்மா, நானும் உன் கூடவே வரேன்". அவள் தந்தை சுந்தரம் அழைத்திடவே  "அப்பா. நீ மெதுவா மெதுவா நடப்பே, நீ ஒரு சுற்று சுத்தறதுக்குள்ளேநான் மூன்று சுற்று சுத்திடுவேன்,  அப்பவாவது  அம்பாளுக்கு என் நினைப்பு வருதான்னு பாப்போம்." அவள் சொற்கள் அவள் உள்ளத்தின் அடியில் இருந்த துயரத்துக்கு வடிகாலாக அமைந்தன.

 சுந்தரம் ஒரு புன்முறுவலுடன்  'நம்பிக்கை வையும்மா. அவள் மேல வெச்ச நம்பிக்கை வீண் போகாது "   அவர் பின்னே நடந்தார்முன்னே சென்ற  மனோ தயங்கி ஒரு நிமிடம் நின்று அப்பா வரும் வரை காத்திருந்தாள் .

  "அப்பா, ஒண்ணு கேட்பேன், தப்பா நினைக்க மாட்டியே." மகளின் சொற்களில் இருந்த தயக்கத்தை புரிந்துகொண்ட சுந்தரம் "சொல்லும்மா,அவள் பதிலுக்காக அவள் கண்களை உற்று நோக்கினார்.

  "அப்பா, நிஜமாகவே தெய்வம்னு ஒண்ணு இருக்காப்பா?"   

"என்னம்மா, இப்படி கேட்டுட்ட? . எத்தனை வருஷமா இந்த கோமதி அம்மனையும் சங்கர நாராயணரையும் சுத்திக்கிட்டே இருக்கோம். வாழ்க்கையிலே என்னென்னவோ கஷ்டம் பார்த்திருக்கோம்எல்லாத்தையும் அவ தானேம்மா  நிவர்த்தி பண்ணியிருக்கா." . தன் மகளின் சந்தேகத்தால்  அவர் மனம்  சஞ்சலித்தது.

"இதெல்லாம்  ஒரு நம்பிக்கை தானே அப்பா! ... நிஜமாகவே  தெய்வம்  என்று  ஒன்று இருக்கா? கோமதி அம்மன் என்று ஒன்று இருக்கா?"

தன் மகளின் இந்த புதிய ஆராய்ச்சியால் மனம் தளர்ந்தாலும், அவள் துயரின் வெளிப்பாடு தான் என்று அவரால் உணர முடிந்தது.

"மனோ, கவனத்தை அம்பாள் மேல வை. மீதியை வீட்டிலே போய் பேசிக்கலாம்." மனோவின் பேச்சுக்கு முற்றிப்புள்ளி வைத்து நடையை துரிதப்படுத்தினார்.

 திடீரென்று வந்த சந்தேகத்தில் திரும்பிப்பார்த்த அவர்  அங்கே மனோவைக் காணாமல் சற்றே பதற்றமுற்றார்



"மனோ, மனோ. "அழைத்தவாரே பின்னல் சென்றவர் அங்கே  மனோ புற்றுமண் தொட்டி அருகே  அமர்ந்திருந்த ஒரு மூதாட்டியுடனும் அவள் மகளுடனும் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து ஒரு பெருமூச்சு  விட்டுக்கொண்டே ஒதுங்கி  நின்றார்.

மெதுவாக தந்தையை நோக்கி வந்த மனோ "தெய்வமாம் தெய்வம்.             கஷ்ட்டப்படரவாளுக்கு என்ன செய்யறது இந்த தெய்வம்?"

கண்களின் ஓரத்தில் வழிந்த கண்ணீரை அவள் துடைத்துக்கொள்வதை பார்த்த சுந்தரம் "என்னம்மா. ஒரு மாதிரியாய் இருக்கே ?" எனக் கேட்க  "என்னத்தை சொல்றது? அவா அவா கஷ்டம் அவா அவாளுக்கு. நமக்கென்ன? நம்ம என்ன தெய்வமா கஷ்டத்தைத்  தீர்க்க?"

 அவள் நடையில்  ஒரு  புயல் வேகம் தென்பட்டது.

 மீண்டும் அடுத்த சுற்றில் அதே புற்றுமண் தொட்டி அருகே மனோ நின்று அந்த பெண்ணிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து "என்ன ஆச்சு இவளுக்கு?"
மனதில் வேதனையுடன்  மீண்டும் ஓரத்தில் ஒதுங்கி நின்றார்

வேகமாக தந்தையை நோக்கி வந்த மனோ "அப்பா, அப்பா, நான் ஒண்ணு கேட்டா செய்வேளா?"   

பதிலுக்குக் கூட நிறுத்தாமல்எனக்கு ஒரு ஆயிரம் ரூபாய் வேண்டும். ஆமாப்பா. ப்ளீஸ் அப்பா,  ப்ளீஸ் அப்பா., அர்ஜென்ட் அப்பா. பாக்கெட்ல இருக்கோன்னோ. கொஞ்சம் கொடுப்பா. அந்த பொண்ணு பாவம்பா. "

 பதில் சொல்ல முடியாத நிலையில் இருந்த சுந்தரத்தின் பையில்  இருந்து  ஒரு ஆயிரம் நோட்டு வெளியே வந்ததுஓடிச்சென்று அந்த நோட்டை அந்தப்பெண்ணின் கைகளில் திணித்துக்கொண்டே "போ. நேர போயி ஒரு  ஸ்கூல்  யூனிபாரம் வாங்கிக்கோ.  டிரஸ் இல்லை என்பதற்காகப் பள்ளிக்கூடம் போகாமல் இருக்காதே. ஒரு செட் டிரஸ் என்ன விலை?"

"அக்கா, ஒரு செட் ஆயிரத்தி அம்பது ரூபாய் . "

 "அப்போ இன்னொரு அம்பதுக்கு என்ன பண்ணுவே? இரு, இரு, இதோ வந்துடேன்என்றவாறே தந்தையை நோக்கி ஓடினாள்

" அப்பா. அப்பா. இன்னும் ஒரு நூறுப்பா. ஆயிரம் கொடுத்த கை இன்னொரு நூறு கொடுக்காதாப்பா?" அந்த கொஞ்சலுக்கும் அந்த வேள்விக்கும் பதில் சொல்ல முடியாத சுந்தரம் இன்னொரு நூறு ரூபாயையும்  கொடுத்தார்.

அக்கா. ரொம்ப தேங்க்ஸ் அக்கா. பள்ளிக்கூடம் போறப்பலாம் ஒன்னை நினைச்சுப்பேன் அக்கா. இப்பத்தான் உள்ளே அம்பாள் கிட்டே கேட்டேன் "நீ தெய்வம் தானா? என்னை ஏன் இவ்வளவு கஷ்டப்படுத்தற நீஎன்றுமனசுல தெய்வம் உண்டா இல்லையான்னு கூட சந்தேகம் வந்தது அக்கா. இப்போ புரிஞ்சுபோச்சு அக்கா. அந்த கோமதிதான் உன்வடிவத்தில வந்திருக்கான்னு.  பள்ளிக்கூடம் போறப்ப  தினம் உன்னை நினைச்சுப்பேன் அக்கா. அம்பாளைப் பார்க்கும்போதெல்லாம் உன் நினைவு வரும் அக்கா.”” அந்தப் பெண்ணின் கண்களில் நீர் வழிந்து ஓடியது.

மனோ தன் கண்ணீரை அடக்கிக்கொண்டு  "போடி பைத்தியம். என்னவோ மனசுல தோணித்து. செய்தேன் . இதைப் போயி பெருசா.”

அந்தப் பெண்ணின் தாய் மனோவின் கைகளை கண்ணில் ஒற்றிக்கொண்டு "அம்மா. அந்த தெய்வம் கல்லுதான். ஆனா  அது மனித ரூபத்திலேதான் வரும். உன்ன மாதிரி."

திரும்பி வந்த மனோவின் முகத்தில் ஒரு இனம் புரியாத சந்தோஷம் இருப்பதைக்கண்ட  சுந்தரம் "என்னம்மா ஆச்சு?"என்றார்.

 "அப்பா  நான் வரும்போது அந்தபெண் அவ  அம்மாகிட்ட நான் நாளையிலேந்து ஸ்கூல் போக மாட்டேன்.  டீச்சர் கிழிந்த டிரஸ் போட்டுக்கொண்டு வராதேன்னு சொல்லிட்டாங்க. மத்த பசங்களெல்லாம் இவளோட உடம்ப பார்த்துக் கமெண்ட் அடிக்கிறாங்களாம். அதுனாலே ஸ்கூல் போக மாட்டேன்னு அடம் பிடிச்சா. அவ அம்மா நான் காசுக்கேங்கே போவேன்? படிப்பை நீ நிறுத்திடு. ஒன்பது கிளாஸ் படிச்சது போரும். என்னோட வேலைக்கு வந்திடுன்னு சொல்லிக்கொண்டு இருந்தாங்கஎனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது. அதான் உன்னைத் தொந்தரவு பண்ணினேன்மன்னிச்சுக்கோப்பா."

சுந்தரம் ஒரு புன்முறுவலுடன் முன்னே சென்றுகொண்டிருந்தார்.


No comments:

Post a Comment