Saturday, September 5, 2015

Naan Kanda Kannan - Tamil Poem on "Lord Krishna" on janmashtami

நான் கண்ட கண்ணன்

காரிருளில் பிறந்த ஒளியொன்று
கண்ணன் என்ற பெயர் கொண்டது!

எட்டாத அறிவுக்கும்
எட்டிவிடும் அறிவாக
எட்டாம் குழந்தையாய்
எழில்வடிவம் வந்தது !

கார்மேகம் மின்னலிடக்
காற்றிடையில் இடியொலிக்கக்
கருநாகம் குடைபிடிக்கக் 
காற்றாட்டைக்  கடந்தது !

காசினியைக் கையடக்கக்
கம்சனவன் துடிதுடிக்கக்
கார்வண்ணன் கால்மிதிக்கக்
கனவங்கே கலைந்தது !

மண்ணுண்ட மாதவனின்
வாய்கண்ட தாயவளும்
நோய்கண்ட மருந்தாக
வான்கண்டு வியந்தாளே !

கால்நடை பயின்றவுடன்
காளிங்கன் மேலேறி
நர்த்தனங்கள் பயின்றிடவே
நாரணனும் சென்றானோ?

கோவர்தனமும் தவமிருக்க
கோவிந்தனுக்குக்  குடைபிடிக்க
கோபங்கள்  பயனின்றிக்
குனிந்தானோ  இந்திரனும்?

கோமகனின்  குழலுக்குக்
கோவினமும் பால்சுரக்கும்
கோதையர்   மெய்மறக்கும்
கோலாட்டம் உளமினிக்கும் !

தருமனின் அறம் காத்தான்
திரௌபதியின் மானம் காத்தான்
தனஞ்சயனின் வீரம் காத்தான்
தரணியின் தர்மம் காத்தான் !

அவனிக்கு மறை தந்தான்
அவலுக்குப் பொருள் தந்தான் !
அறிவுக்குக் கீதை தந்தான்
அன்புக்குத் தன்னைத் தந்தான் !

துளசிக்குத் தலைவணங்கும் எளிமை
துயரத்தில் தோள்கொடுக்கும் வன்மை
தூங்காத நித்திரையில் அவன் பெருமை
தூய மனத்தில் வாழ்கின்ற மேன்மை !

காரிருளில் பிறந்த ஒளியொன்று
கண்ணன் என்ற பெயர் கொண்டது !!











No comments:

Post a Comment