Saturday, December 26, 2015

மார்கழி மணாளன் 6 சோளிங்கர் யோக நரசிம்மர்

மார்கழி மணாளன்     6
சோளிங்கர் யோக நரசிம்ர்




அரிபாதி நரன்பாதி சரிபாதி உருவாகி
அருள்மாரி பொழிகின்ற அவதாரச் சிறப்பே!
கல்பாதி மண்பாதி தூண்பாதி உடைய
உள்பாதி வெளிபாதி அமர்ந்த  திருவே  !

அகம்நாடி இகம்நாடி அருள்நாடா மதிமூடன்
விதிமுடிக்க இடம்நாடி வந்த அருள்வடிவே !
அரியன்றி வேறில்லையெனக் குறியுணர்ந்து 
கதிகேட்ட கோமகனை வாழ்வித்த கோவிந்தா  ! 

விண்பாட மண்பாட வேதங்கள் புகழ்பாட
பண்பாட சொல்லில்லா பாவலர் தடுமாற
சொல்லுக்குள் சுவையாய் சுவைக்குள் சொல்லாய்
கல்லுக்குள் கரும்பாய்  காட்சி தந்தாய் !

கனலான கண்களிலே கருணைபொழிய  
கமலத்தில் அமர்ந்தாளும் வேண்டிடவே
கனிவுடனே கால்தொடையில் அமர்த்தி
களிப்புடனே காட்சி தந்த யோகேஸ்வரா !

தீயோர்கள் மடிந்திடுவர் தீமைகள் விலகிவிடும்
தீராத பிணியெல்லாம் தீர்த்தமொன்றே நீக்கிவிடும்
தீண்டிய பயமெல்லாம் தீதின்றி மறைந்துவிடும்
திருநாமம் சொல்லியுன் திருப்பதமே நாடிட்டால் !

கடிகையிலே கண்திறக்கும் திருகடிகைவாசா !
சோதனைகள் நீக்கிவிடும் சோழலிங்கநாதா !
அருளுக்கு அழகுதரும் அன்பே,அழகியசிங்கா !
ஆட்கொள்ள வந்திடுவாய் ஆழிவாழ் அமரேசா !










No comments:

Post a Comment