Saturday, December 26, 2015

மார்கழி மணாளன் -9 மதுராபுரி -ஸ்ரீ கிருஷ்ணன்

மார்கழி மணாளன்  -9 மதுராபுரி -ஸ்ரீ கிருஷ்ணன்






காசினியின் துயரங்கள் களையெடுக்க
காரிருளில் மின்னொளியே துள்ளிவர
கம்சனுடன் காளிங்கன் கதைமுடிக்க
கருவண்ணம் இங்கே கண்விழித்தம்மா !!

எட்டாத வேறுலகில் அவனில்லை
எட்டுகின்ற மனத்திற்குள் அவன் சிறை !
எட்டாம் நாளோ  தேய்பிறையோ
எட்டாம் குழந்தை எட்டி யுதைத்ததம்மா !! 

கொட்டும் மழையிலே குடை நாகம் பிடிக்க
கூடை யிலே குழந்தையாய்  சிரித்திருக்க
விண்ணவரும் மண்ணவரும் வியந்திருக்க
இன்னொரு அவதாரம் இங்கே வந்ததம்மா !

மண்கொண்டவாயினைக் கண்கொண்ட மங்கை
மழலையென முகம்பிடித்து வாய்திறக்க
மூவுலகும்  முக்காலமும் ஏழ்பிறப்பும்
முகுந்தன் காட்டிவிட மூவினை கழித்தாளே !

கள்ளத்தனம் வெள்ளையுள்ளம் தீதில்லா கிள்ளைமனம்
காரிகையர் குடமுடைத்து  வெண்ணையுண்ணும் !
உரலிழுத்து உடைத்துவிடும் அரக்கர்குணம்
குழலேடுத்துக் கோதையர்தம் உளம்கவரும் !

கருநாகன்  தலைமேல் கால்வைத்தே கண்ணா !
காளிங்கன் ஆணவத்தை  அவன் வாலில் சுருட்டி
தக்கத்திமி தாம் தம் திமிதோ மென்றே தாளமிட்டே 
தரணியில் ஆணவத்தை அறிவால் அழித்தாயே !

சின்னப்பிள்ளை கண்ணனென்று நினைத்தவர் சிறுமையுற  
சின்னஞ்சிறு விரல்களால் விந்தை பல படைத்தான் !
சின்னக் குழலொன்றை இதமாய் இசைத்தே சிங்காரன்
சிந்தைகள் ஆயிரம் ஆயிரம் சிலிர்த்திட வைத்தான் !

பால்மணமும் பூமணமும் அவன் மணமே !
பாசறையில் பிறந்தாலும் மதுராவின் மன்மதனே !
ஆலிலையில் அவன் உறங்குவதைப் பாருங்கள் !
ஆராரோ, ஆராரோ பாடிடலாம் வாருங்கள் !





No comments:

Post a Comment