Wednesday, April 13, 2016

அனுமன் அறுபது (ஒரு கவிதை மாலை)

          அனுமன் அறுபது
                          (ஒரு கவிதை மாலை)
                      .பாலசுப்ரமணியன்                                                  
                                
                    விநாயகர் காப்பு                                                          
                                     

           அரசின் ஆலின் வேம்பின் அடியமர்ந்தோய் !
            ஆனந்த மூர்த்தி ஐங்கரனே அருளாளா !
        அருந்தமிழ் அவ்வை போற்றிய புண்ணியனே !
       அனுமனைப் போற்றிட வந்தேன் அருள்வாயே !



                            முதல் பத்து
                                       

அதிசய உருவே ஆனந்த வடிவே !
அஞ்சனை மகனே , ஆதவன் அருளே !
அபயம் தேடி அடிகளைப் பணிந்தேன்
அருள் தர வருவாய் அனுதினம் நீயே!

அஞ்சா நெஞ்சனே, அறிவின் அமுதே !
அன்பின் வடிவே, அமர வாழ்வே !
அவயங்கள்   அடக்கிய , ஐம்பொறி  ஓடிக்கிய
ஆனந்த வாழ்வின் அழியாச் சிற்பியே !

காலைக் கதிரின் கருணை ஒளியே !
கவலைகள் தீர்க்கும் கலியுக மருந்தே !
கடமைகள் விளக்கிடும் கலங்கரை விளக்கே !
கற்பனை தாண்டிய வினயத்தின் வடிவே !

வானையும் அளந்த வாயுவின் மகனே  
வருவினை தீர்த்திடும் வானரத் தேவே !
வழக்குகள் தீர்த்திடுவாய் வாதங்கள் நீக்கி
வேண்டியே நின்றேன் வார்த்தைகள் இன்றி !

நெஞ்சினில் என்றும் இராமனின் வடிவம் 
நினைவில் ஒன்றிய நிரந்தரத் தெய்வம்
நாவினில் இராமன் நாளும் பொழுதும்!
நானும் சொல்லிட அருள்வாய் என்றும் !
  
கண்களில் அமைந்தது காகுத்தன் உருவே !
கைகள் குவிந்தது கனிவுடன் முன்னே !
கோசலைத் தலைவன் திருவடி போற்றி
கருணையால் வென்றாய் காலங்கள் அனைத்தும் !

கடலினைக் கடந்தாய் கணையாழி கொடுக்க
காட்டினை அழித்தாய் கர்வத்தை ஒடுக்க
கற்புடைத் தலைவி கண்ணீர் துடைத்த
காவியத் தலைவா ! காலடி சரணம்!

தோள்களில் நின்றது தோதுடன் கதையே
வாலில் நின்றது வளராது நெருப்பே !
சொல்லில் நின்றது சூதில்லாப் பணிவே
சுமைகள் அறியா சுந்தர வடிவே !

கண்களால் பார்த்தால் வானர வடிவம்
கருத்தினில் வைத்தால் மாதவன் சின்னம்
கலைகள் ஆயிரம் ஒன்றிய உருவம்
கருணைக் கடலே ! காத்திட வருவாய் !

தானடங்கித் தன்னருமை தெரியாமல் நின்றவனே
தானறிந்து தன்னுருவை தரணியிலே வளர்த்தவனே
தாபங்கள் அனைத்தையும் தானாக வென்றவனே
தாள்பணிந்தேன் தெய்வமே, தோள் கொடுப்பாய் !

  


                 இரண்டாம் பத்து


 கருணைக் கடலே ! கண்கள் போற்றி
காக்கும் வலிமையே ! கரங்கள் போற்றி  !
காற்றின் மைந்தா ! கால்கள் போற்றி !
காத்திட வருவாய் ! கண்மணி போற்றி !

வானர வடிவம், மானுட தேகம்
வானவர் குலத்தின் வளர்பிறைத் தெய்வம்!
வல்லவர் நல்லவர் தேடிடும் ஞானம்
வடையையும் மாலையாய்  அணிந்த வினோதம் !

 குளிர்ந்த பார்வை கூப்பிடும் அருகில்
 குறைவில்லா அழகு கூடிய நிறத்தில்
 குழந்தையின் சிரிப்பாய் குவிந்த முகத்தில்
 குறைகள் மறையும் பார்த்த தருணத்தில்.!

பணிவுக்குப் பாசுரம் நீ படைத்தாய் !
பண்புக்கு இலக்கணம் நீ கொடுத்தாய் !
பக்திக்கு ஆலயம் நீ அமைத்தாய் !
பரமனின் உறவை நெஞ்சினில் வைத்தாய் !

சீதையின் தலைவனைச் சிந்தையில் வைத்து
சிந்தையில் என்றும் பக்தியை வைத்து
பாதையில் என்றும் பண்பினை வைத்து
சேவடி   தன்னில் சேவைகள் செய்தாய் !

குறை தீர்க்க முன் நிற்கும் குணசீலா !
நிறை நிலவாய் அருள்சுரக்கும் ஆனந்தா !
மதி கொடுத்து விதிகடத்தும் வல்லோனே !
கதி  கொடுத்து வினைதீர்ப்பாய் நல்லோனே !

வானில் செல்கையில் வானுக்கு அழகு
நீரினைத் தாண்டிட  நீருக்கு அழகு
நிலத்தில் நின்றால் நீயே அழகு
நித்தம் உந்தன் நினைவே அழகு !

வாரணம் ஆயிரம் தோளுடை வலிமை
பாரினில் நிகரில்லை பணிவின் மேன்மை
நீருடை மேகமாய் நித்தமும் அருள்வாய்
வாலுடை வேந்தே! வருவாய் விரைந்தே !

அலையாத மனமும் அசையாத நினைவும்
அன்பான உணர்வும்  அருளுடை நெஞ்சும்
அழியாத செல்வமாய் , ஆரியன் நினைவும்
அருளிட வேண்டினேன் அஞ்சனை மகனே !

கண்களில் பக்தியும் கைகளில் சக்தியும்
மனத்தில் வேகமும் மதியில் யூகமும்
சொல்லில் பண்பும் சோர்விலா அன்பும்
சேர்த்திட அருள்வாய் சீதையின் செல்வா !

          
                              மூன்றாம்  பத்து                      
           

வெள்ளை யுள்ளம் கொண்டவனே வேதவித்தே
பிள்ளை யெந்தன் அஞ்ஞானம் நீக்கிடுவாய்
வெண்ணையுடை கொண்ட மெய்ஞான மாமேரு
விரைந்திடுவாய் நகர்ந்திடவே வாழ்க்கைத் தேரே!

 அடியாருக்கு அடியவனாய்  ஆனவனே அமரா
ஆனந்தநிலை தவறா அதிசயனே அனுமந்தா
அறிவுக்குப் பொருளாய் விளங்கும் ஆஞ்சநேயா
அன்பும் அருளும் அளிப்பாய் ஆகாயவீரா  !

 சமயத்தில் உதவிடும் சஞ்சீவி நீயே
சரணம் அடைந்தோருக்கு சாரதி நீயே
சாகாத வரம் கொண்ட சிரஞ்சீவி நீயே 
சரணம் தருவாய் சங்கடம் அகற்றி  !

சொல்லாமல் புரிந்துகொள்ளும் சூட்சுமம் உனக்கு
சொல்லியும் அறியாத பேதைமை எனக்கு
செக்கிழுக்கும் மாடாய் சுழலும் வாழ்வை
சீக்கிரம் மாற்றிவிடு ஸ்ரீராமன் காட்டிவிடு !

இருப்பது எதுவும் போதாத மனமெனக்கு
இருப்பதுவும் சென்றுவிடும் பயத்தில் தவிப்பு
இருப்பது என்றும் இறைவன் வழித்துணையே
இசைவாய் நீயிருக்கும் இறைவன் காலடியே !

கொடியினிலே அமர்ந்தே குருசேத்திரம் கண்டவனே 
கோகுலனின் தேரமர்ந்து குலம்காக்க அருளியவனே
கோடியுள்ளம் தேடிவரும் குறைசொல்ல நாடிவரும்
கோமகனே!  குறையில்லா வானரனே ! வாழ்த்திடுவாய் !

ணையாழி கொண்டுவந்து கவலைகள் தீர்த்தவனே
கலையாத மனம்கொண்டு கடமைகள் செய்தவனே
கடல்மீது கால்நடக்கப் பாலங்கள் படைத்தவனே
காமத்தை வென்று நாமத்தில் நெகிழ்ந்தவனே !

தூதனுக்கு இலக்கணம் இலங்கயில் படைத்தாய்
தூற்றாமல் நல்லறிவைத் துணிந்தே சொன்னாய் !
தூங்காத விழிகொண்டு துயர்தீர்க்கும் தூயவனே
தூயமனத்திற்குத்  துணை நிற்கும் பேரொளியே !

நீருண்ட மேகமென வானில் நீபறக்க
நிழலுண்ட நீர்த்துளிகள் உன்னைத் துதிக்க
வானின்ற வேதவரும் எழில்கண்டு வியக்க
நானறிந்த ஐம்பொறியின் சாரதியே சரணம் !

 ஊழ்வினைகள் உனைநினைத்தால் ஓடி விடும்
நிகழ்வினைகள் உன்னருளால் அமைதி பெரும்
வருவினைகள் விதியறிந்து வளம் பெருக்கும்
மூவுலகும் போற்றிவிடும்  மூப்பறியா மாமருந்தே !


                                                     நான்காம் பத்து

 கண்ணிரண்டில் நீர்மல்கும் காகுத்தன் பெயர்கேட்டால்
காதிரண்டும் சொல்கேட்ட இன்பத்தில் சுவைகூட்டும்
கணநேரம் மனக்கோயில் மெய்மறந்து மலர்தூவும்
மாதவனின் மனம்கவர்ந்த மாருதியே ! மனமிரங்கு !

பூப்போன்ற மனம் கொண்டவனே  புதியோனே !
பூங்குன்றம் போதாது பொழுதும் போற்றிடவே !
பூவுலகில் புதிராக இருக்கின்ற பூம்பொழிலே
புதிதாக மொழியொன்று  இனியில்லை போற்றிடவே !

பொல்லாத தீவினைகள் பொடியாக்கும் பார்வை
பொருந்தாத நினைவுகளை பொசுக்கிவிடும் கூர்மை
போர்முனையில் வாழ்வுக்குக் கவசம் உன்மேன்மை
போதாதுபோதாது புகழாரம் உனக்கென்றும் பல்லாயிரம் !

 பணிவோடு நீயிருக்கும் பாவனை கண்டு
பயம்கூட பயம்கொண்டு பாதைகள் மாற்றும்
பலம்தந்து நலம்தந்து மனம்நின்ற மாருதியே
பணிவோடு சரணடைந்தேன் பாதைகள் காத்திடுவாய் !

மனத்துள்ளே நீயிருந்தால் மலமெல்லாம் நீங்கிவிடும்
மங்காத ஒளியாக, மாருதியே, மனம் நிறையும்
மடிந்திட்ட நம்பிக்கைகள் மறுபடியும் தலைதூக்கும்
மனக்கோவில் படைத்திட்டேன் மறுக்காமல் வந்துவிடு.!

 மார்கழி மூலத்தில் மாதவத்தால் வந்தவனே
மாதங்கள் பன்னிரண்டும் போற்றிடும் ஆதவனே
மாறாத சிந்தையுடை மங்கள   மூர்த்தி
மாநிலங்கள் போற்றிடுமுன் மங்காத கீர்த்தி  !

 போகின்ற இடமறியாத புள்ளாகப் பறந்தேன்
போதனைகள் கேட்காமல் புல்லாக வளர்ந்தேன்
போதுமென்ற மனமின்றி புவியெல்லாம் அளந்தேன்
புகலிடமே உன்பாதமென புரிந்தபின்னே வந்தேன் !

 புலனெல்லாம் தந்தது புதுச்சுமைகள் பூபாரம்
பொல்லாத உணர்வுகளின் போர்க்கள ஆரவாரம்
புரியாத வாழ்விற்குப் போக்கிடம் வேறில்லை
போற்றிடுவேன் காத்திடுவாய் புலன்வென்ற நாயகனே !

ஸ்ரீராமன் போற்றுமிடம் செவிசாய்த்து நிற்பவனே
சீதா மணாளன் தாள்போற்றித்  தவம் செய்பவனே
சிறுதேனும் தவறின்றி ரகுகுலம் காத்தவனே
சிரஞ்சீவி! உன்னருளைச் சிறுதேனும் தந்திடுவாய் !

 வெற்றிலை அணிந்தாலும் வெற்றியைத் தருபவனே
வெற்றிடம் ஏதுமின்றி நினைவெல்லாம் நிறைந்தவனே !
வேகத்தில் வினைமுடித்தும் விவேகத்தை அறிந்தவனே !
வேதனைகள் நீக்கிடவே விரைவாக வந்திடுவாய் !


                 ஐந்தாம்  பத்து   
                                                                                                           
சாந்தமூர்த்தி உனக்குச் சாந்தினிலே காப்பிட்டால்
சங்கடங்கள் நீக்கிடுவாய் சகலமும் தந்திடுவாய்
காந்தமென இழுத்துக் கைபிடித்துக் காப்பவனே
காலமெல்லாம் காத்திடுவாய் காகுத்தன் சோதரனே !

மல்லோனின் மதம் அடக்கியது கால்வலிமை
வில்லோனின் மனம் வென்றது அன்புடைமை
வைதேகி துயர்நீக்க வளர்ந்தது தோள்வலிமை
வணங்கி நின்றோரின் நலம்காக்கும் அருளு டமை !

வால்வளர்ந்த நெருப்பை வள்ளலாய் தந்தவனே
வான்வியந்த இலங்கையின் வாசத்தை அழித்தவனே
வனம்காத்து வைதேகி நலம்காத்து வந்தவனே
வரும்துயர் காத்து வினைதீர்க்கும் வல்லவனே !

மங்கிடும் பார்வையும் மயங்கிடும் மதியும்
மறைந்திடும் நினைவும் மருண்டிடும் உறவும்
மடியினில் ஏந்தி மலரடி அடைந்தேன்
மடிந்திடும் வரையில் மாருதி காப்பாய் !

 பிறவிப்  பெருங்கடல் கடந்திட எளிதில்
பிறவாப் பெருமை பெற்றிட விரைவில்
பூரண நிலவாய் ஒளிர்விடும் மாருதி
பொழுதினில் வருவாய் போற்றினேன் திருவடி.!





தாயினைத் தேடிடும் கன்றினைப் போல்
சேயென வந்தேன் சந்நிதி முன்னே
பேயென அலையும் மனதினைக் காத்து
தாயெனத் தருவாய் அன்புடன் அருளை !

பின்னோக்கி ஆர்ப்பரிக்கும் இளமையின் இழுப்பும்
முன்னோக்கி மோப்பமிடும் மூப்பின் தவிப்பும்
உள்நோக்கா உதிரிப்பூ வாழ்க்கை உருமாற
உலகளந்த நாயகனே ! உள்ளிருந்து அருள்வாய்!

 கள்ளுண்ட வண்டாகக் களம்நாடும்   கள்ளமனம் 
காலத்தின் இரையாகி காமத்தின் கோலமிடும்.
கள்ளமில்லா நெஞ்சுடையோய் ! கருணைக் கடலே !
காகுத்தன் வழிகாண காமத்தை அழித்துவிடு!

கருவோடு வந்தது எருவோடு போகுமென்றும் 
உருவான  வண்ணம் தெருவோடு செல்லுமென்றும் 
அறியாத மனத்தில் அடங்காத ஓலத்தின்
தணியாத தாகத்தை தணித்திடு தந்திரா.!

வந்தது அறியா வாழ்வென்று அறிந்தும்
செல்வது அறிந்த உண்மையை மறந்தும்
அறிந்தும் அறியா அரங்கமோ வாழ்க்கை ?
அறிவின் சிகரமே ! அனுமனே வழிகாட்டு !

                                                                ஆறாம்  பத்து

சுவைத்து சுவைத்து சுவையை மறக்கும்
சொல்லிடும் சொல்லின் சொந்தத்தைத் தவிர்க்கும்
வல்லினம் மெல்லினம் நல்லினமறியா நாவினில்
சொல்லின் செல்வனே ! வல்லமை தந்திடு !

 வித்தகன் சத்தியன் விருப்பங்கள் வென்றவன்
 நித்தியம் இராமனை நினைவினில் வைத்தவன்
புத்தியில் பூரணன் சக்தியில் வல்லவன்
 பக்தியில் இமயம் பாதங்கள் சரணம் !

விதியின் வலியினைக் குறைக்கும் மருந்து 
மதியினைக் காக்கும் அமுதுடை விருந்து
கதியென வந்தோர்  களிப்புறும் கரும்பு
இனியிலை கவலை நின்னருள் சிறப்பு !

யோசனை தூரங்கள் எளிதில் கடந்தும்
ஆசனம் தேடா  அரும்பெரும் தெய்வம்
யாசகம் கேட்டு உன்னிடம் வந்தேன்
சாகசம் செய்யாது சடுதியில் அருள்வாய் !

பூசைகள் யாகங்கள் புனலும் வேண்டா
புண்ணிய மூர்த்தி புலன்களைக்  காப்பாய்
ஆசைகள் அனைத்தையும் அறுத்திட வேண்டி
அடிகள் பணிந்தேன் அன்புடன் அருள்வாய் !

வணங்கிட உன்னை வார்த்தைகள்  இல்லை 
வாழ்த்திடப்  போற்றிட மொழிகள்  இல்லை 
காற்றினில் உலகைக் கடந்திடும் தேவா
கனிவுடன் முன்னே கைகள் குவித்தேன் !

 வரங்கள் ஆயிரம் வேண்டாம் எனக்கு
வரவாய் வேண்டும் உந்தன் அருளே !
வாடிய நேரத்தில் விரைந்தே வருவாய்
வாடா மலராய் நெஞ்சினில் மலர்வாய் !

கூப்பிய கைகள் குவிந்தே நிற்கும்
குலத்தின் நலத்தை விழைந்தே நிற்கும்
கோணிய உறவுகள் நேர்நிலை பெற்று
குவலயம் சிறப்புற குரலினை எழுப்பும் !

 நாடினேன் உன்னையே நாசியின் மூச்சாய்
 நிறைந்திடு உறைந்திடு உறுதியில் உணர்வினில்
 நரம்பினில் தசையினில் நலமுடை நெஞ்சினில்
குருதியில் குடலினில் குறைவின்றி  நினைவினில் !

கண்களில் நிற்பாய் கலங்கரை விளக்காய்
காரிருள் நீக்கியே கதிரவன் ஒளியாய்
காலங்கள் வைத்தேன் காலடி முன்னே
காத்திட வருவாய் ! கருணா மூர்த்தி !
 
                                                                             சுபம்

                

No comments:

Post a Comment