Monday, July 25, 2016

இலக்கியம் எழுதாத நட்பு

இலக்கியம் எழுதாத நட்பு..
(முதல் பகுதி)

இலக்கியம் எழுதாத நட்புக்கு
இதயத்தில் காவியம் படைக்கிறேன் !
இலக்கணத்தில் சிறைப்படாத நட்புக்கு
இலக்கியம் தேடுகிறேன் !

இயற்கையை இசைக்கின்ற நண்பனின்
இசையில் ராகமாய் நிற்கிறேன் !
சொல்லுக்குப் பொருளாய்
பொருளுக்குச் சொல்லாய்
சுவையூட்டும் சுதந்திரனின்
சுவையை ரசிக்கிறேன் !

கண்திரைக்குப் பின்னிருந்து
கைப்பிடித்து வழிநடத்தும்
கள்வனவன் !
கருத்துக்குள்  நுழையாமல்
கற்பனையோடு விளையாடும்
காலத்தின் தலைவன் !

கடவுளென்ற பெயர் அவனுக்கு ..
கற்றவர்கள் சொன்னார்கள் !
கற்றதனால் நானும் அழைத்தேன்
கடவுளென்று கைப்பிடித்த நண்பனையே !

நொடிகள் மணித்துளிகளாய்
மணிகள் நாட்களாய்
நாட்கள் ஆண்டுகளாய்
ஆண்டுகள் யுகங்களாய்
கழிந்த போதும் ...
கைப்பிடித்த என்னை
கைகழுவாத நண்பன்  !

இனியதோர் பயணம்..
அமைதியான பயணம்...
அவன் பேசுவதில்லை ..
நான் ஏனென்று கேட்பதில்லை...

இருண்ட பூமியில் ..
வறண்ட நிலத்தில் ..
காலைக் கதிரின்
முதல் முத்தம் போல்
சருகான இலைகளை
அவன் பாதங்கள் தொடும்போது ..
தெறிக்கின்ற தீப்பொறிகள்..
பாதைக்கு பாலமிடும் !

முந்திய இரவில்
மூச்சடிக்கிய காற்று
முன்மொழிந்த பனிமுத்துக்கள் ..
காலையின் கண்களைக் கண்டதும்
சோம்பல் முறித்துச்
சுகம் தேடும் !

புதியதோர் உலகம்
கண்டதுபோல் ..
புண்படாத புன்னகைகள்
சிறகடித்து விண் செல்லும் !

இலைச்சருகல்கள் இசையமைக்க  
இணையில்லாச்  சுகத்தினிலே..
தென்றலோர் தெம்மாங்கு பாட.........
ஒளி படரும் !
ஒலி பாடும் !
.
நிலை மறந்து..
நானும் என் நண்பனும்
கைகோர்த்து..
அமைதியாய்..

எங்கே போகிறோம்?..
எனக்குத் தெரியாது..
அவன் சொல்லவில்லை..
நான் கேட்கவில்லை..


இனிதான பயணம்..
அமைதியான பயணம் !

மந்தையில் செல்லும் ஒரு ஆடு போல
தலையை அசைத்துக்கொண்டு..
அவனருகில்..
நான்........!!

சில நேரங்கள் சிந்தனையில்..
சில நேரங்கள் கற்பனையில்
சோர்வின்றி..

அவனிடம் கேட்க என்னிடம்
கேள்விகள் இல்லை..!
வினாக்களுக்கு விடையளிக்கும்
வழக்கம் அவனுக்கில்லை !

போகுமிடமெங்கென்று...
புரியாமல்..

ஒன்று மட்டும் உண்மை
இது ஒரு அர்த்தமுள்ள பயணம்..
புதியதோர் இலக்குநோக்கி..
புரியாததைப்  புரிந்துகொள்ள......
அறியாததை அறிந்துகொள்ள.......

பாதையெல்லாம் சோதனைகள்
புதுப் புது இரகசியங்கள்..
புலனுக்குப் புரிந்ததெப்படி ?

நாங்கள் இருவரும்..
கைகோர்த்து..
அமைதியாய்..
புரிந்துகொள்ள முயற்சிக்காமல்..
கேள்விகளின்றி...
பதில்களின்றி...

என் நண்பனுக்கு
எப்படி நன்றிசொல்வது?
அவனைப் போற்றியா ?
அவனை வாழ்த்தியா?
தெரியவில்லை..
அமைதியாகச் செல்கிறேன்..
அவன் கைபிடித்து ..!

  
இலக்கியம் எழுதாத நட்பு 
(இரண்டாம்  பகுதி)

நண்பனே !
நமது அமைதியான பயணத்தில்
ஆயிரம் கேள்விகள்..
என் உள்ளத்தில் ...
.

நண்பனே,
நீ எதை நேசிக்கிறாய்?
என் உடலையா ?
அல்லது உயிரையா?

உயிரின்றி இந்த உடலுக்கு
என்ன பொருள்?
உடல் என்றால் என்ன?

உடலுக்குள் உயிரா ?
உயிரால் உணர்வுற்ற உடலா?

உடல்...
எலும்புத் துண்டுகளை..
இசைவாய் காற்றினில் அடுக்கி..
ஈரக் காற்றில் ..
மிதக்க விட்ட மாளிகையா?


எங்கேயோ மிதக்கும் எண்ணங்கள்
இளைப்பாற இடமின்றி
களைப்பு நீங்க ஒதுங்கிவிடும்
உலகத்தின் பூங்காவனமா?

காதலென்றும் ..
காமமென்றும் ..
சுகமென்றும்..
சொந்தமெடுத்து ..
சுவைக்கின்ற  உணர்வுகளில்..
உடலுக்குச்  சொந்தமெது?

ஆணென்றும் பெண்ணென்றும்
அங்கங்களில் அலங்கரித்தாய் !
ஆசைகள் ஆர்ப்பரிக்க
அங்கமெல்லாம் எரிந்துவிட ..
அலைபாயும் மனதிற்கு
உடலை அடிமையிட்டாய் !

கூற்றுவனின் கொடும்பசிக்கு
நாற்றுநாட்டு ..
பயிர்வளர்த்து..
கதிர் அறுக்கும் ..
அறுவடையோ...
இந்த உடல்?

"உடலென்றும் உண்மையில்லை
ஓடுகின்ற பாம்பு ..
உறிக்கின்ற சட்டையது .."
ஓதுகின்ற மாமுனிவர்...
உதடுகளில் உண்மையுண்டோ ?

இந்தக் கூண்டுக்குள்
எதைச் சிறை வைத்தாய்?
தமனிகளும் நரம்புகளும்
தானாக வந்தனவா?
அல்லது...
தரகுக்குத் தந்தாயா
ஒரு வாழ்வுக்கு?

ஜீவநதியாய் குருதிப்புனலை
ஓடவிட்டு..
உடலெல்லாம் கோலமிட
யார் கற்றுக்கொடுத்தது ?

பசியெடுத்தால் அறுசுவை..
பாலுணர்வுக்கு  ஒரு சுவை..
பாரமில்லா வாழ்வுக்குப் பணச்சுவை..

பகடையாய் உடலைப் படைத்தாய்...
பாம்பென்றும் ஏணியென்றும் படம்வரைந்து
பரமபதத்தில் ஆடவிட்டாய் !

ஒரு மூச்சுக் காற்றை நிறுத்திவிட்டு  
உடலுடன்  உறவை நீக்கி
அழுகிவிடும் என்ற அச்சத்தில்
ஊரெல்லாம் தேரோட்டி
நடுக்காட்டில் சுட்டெரிக்க ..
ஏனிந்த அவலம் ?
யார் கேட்டது இந்த உடலை?

நண்பனே!
கதை அறியாமல்
நான் நடிக்கும் ..
இந்த  நாடகத்தில்
நான் கோமானா ?
அல்லது கோமாளியா?
நாடகத்தில் உன் வேடமென்ன ?

உடலுக்குப் பெயர்கொடுத்து
உயிரோட்டம் உள்ளவரை
உலாவ  விட்டது
நீயா அல்லது நானா ?
இந்த உயிரோட்டம் எதுவரை?
என் விருப்பமா?
அல்லது உன் விருப்பமா?

இந்த உடல்
உன் கட்டிடக் கலையின்
திறனுக்கு ஒரு பரிமாணமா ?

இதில் அழகு என்பது என்ன?

கண்ணுக்கும் முகத்திற்கும்
கட்டான உடலுக்கும்
கற்பனையில் அழகென்ற
பரிமாணம் ஏன் கொடுத்தாய்?

அழகையும் அருவருப்பையும்
எப்படிக் கற்பனை செய்தாய் ?

ஆயிரம் உள்ளுணர்வுகளை  
அழகாகக் கோர்த்து ..
எப்படி இதயத்தின் உள்ளே வைத்தாய் ?
எதற்காக ?

நீ..

விஞ்ஞானியா?
விவேகியா?
விகடகவியா ?

யார் உன்னைப் படைத்தது?
உன் படைப்பில் என் பங்கு என்ன?

நண்பனே!! ...
ஆலமரத்தடியில் அமர்ந்து
ஆனந்த தத்துவத்தை
சொல்லாமல் சொன்னவேனே !
உன் அமைதியின் பொருளென்ன ?

இந்த நெடிய பயணத்தில்
நிச்சயமாக...
நீ என்னோடு வருவாய்..
எனக்குத் தெரியும்...
ஆண்டுகள் தோறும்..
யுகங்கள் தோறும்...
நீயும் நானும்...

ஆனால்
ஏன் இந்த அமைதி?
என் கேள்விகளுக்கு
நான் எங்கே பதில் தே


இலக்கியம் எழுதாத நட்பு 
( மூன்றாம்   பகுதி)

நண்பனே !!
உடலின்றி உயிரில்லை...
ஆனால்...
உடலில்லா உயிரெங்கே?

வாழ்க்கை என்றால் என்ன?
வாழ்க்கைக்கும் உயிருக்கும் என்ன உறவு?

புல்லாங்குழலின் ஒரு பக்கம்
நுழையும் காற்று..
இசையாய்
மறுபக்கம் வருவது போல்...

உடலென்னும் இந்தக் குழலில்..
ஓசையின்றிச் செல்லும் காற்று..
இசைக்கும் இசைதான் வாழ்வோ?

இந்தக் குழலை ஊதுவது யார்?
நீயா? இல்லை நானா?
இதில்..
ராகங்களையும் ,
தாளங்களையும்
பாடல்களையும்
யார் எழுதியது ?

ஓர் மரபணுக்குள் உயிரைவைத்து
நாளொரு மேனியும்
பொழுதொரு வண்ணமுமாய்
வளர்த்து ..
வாழ்வென்னும் வலைக்குள்
வாசமுடன் வைத்தது யார் ?

புழுவாக..
புள்ளினமாக
பூமியிலே ஊர்வனவாக..
மண்ணுலகில்..
நீர்நிலையில்..
வானத்தில் ..
வண்ணமிகு உயிரினங்கள் ..
ஏன் படைத்தாய் ?

மரபணுக்குள் ..
உயிர் மந்திரத்தை
யார் எழுதியது?

வாழ்க்கையின் பொருள்பெற்று
ஒரு மரபணு..
இன்னொரு மரபணுவிற்கு ..
என்ன செய்தி சொல்கிறது?
எதற்காக ?

கருவறையில்
தொட்டிலிட்டு ..
தன்னுயிரைப் பணயம் வைக்க
தாய்மைக்கு யார் சொன்னது?

அழுதுகொண்டே பிறக்கின்ற உயிர்
வாழ்வில் அழுவதற்கு
ஏன் மறுக்கிறது?

வாழ்க்கை.. என்பது
முடிந்ததா?
முனைந்ததா?
முடிவதா?





வாழ்க்கை..
எங்கே தொடங்கி..
எங்கே முடிகிறது?

பிறப்பும் மரணமும்..
வாழ்க்கை கதைக்கு
முன்னுரையும் முடிவுரையுமா?

சில உயிர்கள்...
மின்மினிப் பூச்சிகள்... போல் ..
முடிவிலே முதலை நிறுத்தி...

சில உயிர்கள்...
முடிவையே  அறியாமல்...
என்றும் சிரஞ்சீவியாய் ..

சில உயிர்கள்..
நித்தம் பயத்தில்
பிறந்துகொண்டும்.. இறந்துகொண்டும்..

ஏன் இந்த பாரபட்சம் ?
இதை யார் அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தது?

மகிழ்ச்சிகள் ..
வேதனைகள்..
வெற்றிகள்..
தோல்விகள்..
எது வாழ்க்கைக்குச் சொந்தம் ?

அறியாததை அறிவுக்கும்
நிலையாததை உண்மைக்கும் ..
இணைக்க முயலும் ..
முகப்பில்லா முயற்சியோ
வாழ்க்கை ?

விதையாக..
முளையாக..
செடியாக..
பூத்துக்குலுங்கி..
பழமாகிக்கனிந்து
சருகாக ..
வீழ்வதுவோ வாழ்க்கை ?
இதில் எது சிறந்தது ?
முளைப்பதா முடிவதா ?

கேள்விகள் ஆயிரம்..
பதில்கள் பதுங்கிக்கொண்டு.. ... ..
அறிந்தவர்கள் அமைதியில் ..
அறியாதவர்கள் ஆணவத்தில்..!!

நண்பனே..

கோள்கள் பல்லாயிரம்...
தாரகைகள் பல்லாயிரம்..
பால்வெளிகள் பல்லாயிரம்...
அண்டங்கள் எங்கெங்கோ...

இதனிடையில்...
இந்த உயிர்..
இந்த உடல்..

நீ..
நான்..
நமக்குள் என்ன உறவு ?
இது வெறும் நட்பா?
இல்லை ...?

பயத்தில்..
உன்கைகளை ..
இருக்கமாகப் பிடிக்கிறேன்..

பயணம் தொடர்கிறது..
அமைதியான பயணம்..
இனிமையான பயணம்..

ஆண்டுகளாய்
யுகங்களாய் ..
நீயும் நானும்...
போகுமிடம் எங்கே..?



இலக்கியம் எழுதாத நட்பு 
( நான்காம்  பகுதி)

அமைதியான பயணம்...
நினைவுக்கடலில்...
ஆழ்கடலின் உள்ளே..
அலைகளில்லாத இடத்தில்......
இன்னும் அமைதியைத் தேடி...

அமைதி எங்கே?
மகிழ்சியாலா  ?
துயரத்தாலா ?

இன்பங்களின் அந்தப்புர வாசலில்..
சிதறிக்கிடப்போதோ மகிழ்ச்சி?
அல்லது..
துன்பக்கிணறைத் தூர்வாரியபின்..
கொஞ்சிவரும்..
குளிர் நீரூற்றோ ?

இன்பங்கள்...
வறண்டு காய்ந்த பூமியில்...
சில்லென்று விழுகின்ற..
சில நீர்த்துளிகள் போல்..
ஒட்டியவுடன் உலர்ந்துபோகும் !!

உடலின் ஒவ்வொரு அணுவிலும்..
உள்ளே அமர்ந்து..
அமுதம் போல்...
சிகரத்தை வென்ற சிந்தனையைத் தூண்டி..
வந்த சுவடு தெரியாமல்..'
தன் வீடுநோக்கிச் செல்லும் !

இன்பங்கள்.. எதில்?

பிறக்காத பிள்ளைக்குப்
பெயர் சூட்டும் நினைவில் !

உழைத்த உடலிலிருந்து
உதிரமாய்  கொட்டும் ..
வியர்வையின் சுவாசத்தில் !!

பசித்த வயிற்றை
பானைச் சோறு ..
முத்தமிடும் மோகத்தில் !!

ஏழ்மையின் இதயத்தை
காதலிக்கும் வறுமையின் தேடலில் !!

வெறுப்பென்ற நெருப்புக்குள்
கருணையும் வீடுகட்டி ...
வீணைமீட்டும் நாதத்தில்!!!!

மருண்ட இருளின் துயர் நீக்க ..
இன்னொரு விளக்கேற்றும்
மெழுகுவர்த்தியின் தியாகத்தில் !!!!

இன்பத்தையே துறந்து வந்த
இன்பத்தை..
நேசிக்கும் இன்பத்தில் !!

இன்பங்கள் நீர்க்குமிழிகள்..

இதயங்களோடு விலைபேசும்
இடைக்காலத் தரகர்கள் !

உணர்வுகளின் வாசலில்
உமிழ்ந்து செல்லும்
உல்லாசப் பறவைகள் !

வானவில்லை வாசலில் காட்டி ..
கானல் நீரில் கலங்கவிடும்
கற்பனைத் தேர்கள் !

இன்பங்கள்..
வாசமுள்ள பூக்கள் தான் !
வாடிவிடும் காலையிலே !

சிற்றின்பச் சிரிப்பிற்காக
சீழ்பிடித்த உடலும்
சீறியெழுந்து ...
விசிலடிக்கும் வேட்கை !!

பூசைக்கு வந்த மலராய்
பேரின்பச் சிந்தனைகள்..
புலனுள்ளே தவமிருக்க ..
போராடும் வாழ்வோடு!!

சொந்தமென்று எதுவுமில்லை..
இன்பத்தில்..
இல்லாதவர்க்கு கிடைப்பதெல்லாம்
இன்பம் !!
இருப்பவருக்கு இன்னும் வேண்டுவதோ
இன்பம் !!
துறந்தவர்க்குத் வந்தவினை கழிப்பதுவே
இன்பம் !!

மதமுற்ற களிறுபோல்
வீதியெல்லாம் ஓடுகின்றேன் ..
இன்பமென்ற ஒன்றைத் தேடி ..
ஏங்குவதென்.....
மனமா? உடலா? உயிரா ?

மாயத்தை நீக்கி ..
மனதுள் சொல்லிடுவாய்..
மாயவனே !

நண்பனே !
கைப்பிடித்த உன்னுடன்
காலமெல்லாம்
 கேள்விகளின்றி...
பதில்களின்றி..
அமைதியில் ..

நடப்பதுவோ இன்பம் ?

No comments:

Post a Comment