Friday, December 23, 2016

மார்கழி மணாளன் 1

திருஆதனூர் - அருள்மிகு ஆண்டளக்கும்  அய்யன் பெருமாள்


மார்கழி பிறந்தது மாநிலம் மகிழ்ந்திட
மனத்தேர் இழுத்தே வந்தேன் மாதவா!
மரக்கால் எடுத்து மங்கலம் பகிர்ந்திட
மறுக்காமல் வருக மங்கையை அணைத்து !

பகடைகள் ஆடிடும் பன்னிரு மாதங்கள்
பகலவன் பார்வையில் பறந்திடும் பனித்துளி
பாற்கடல் நித்திரை விலக்கியே பரமனே
பரிவுடன் வந்திடு மார்கழி மணாளனே

ஆயிரம் பசுக்களின் ஆனந்த தரிசனம்
ஆதனூர் அண்ணலின் ஆலயம் உறைவிடம்
பாயிரம் படைத்த பக்தர்கள் அனுபவம் 
தாயிடம் சேர்ந்திடும் கன்றுகள் வைபவம் !

பாதைகள் மாற்றிடும் பார்வைகள் விலக்கி
போதையில் வந்தேன் ஆதனூர்  நோக்கி !
சாதனை  வேண்டேன் வேதனை நீக்கு
போதனை போதும் பார்த்தனின் சாரதி !

பிணக்குகள் நிறைந்த வாழ்க்கையின் வழியில்
கணக்குகள் எண்ணிலா காலங்கள் எழுதும்
கடந்த ஊழ்வினை காத்திடும் நல்வினை
கடமையில் சேர்த்திடு காளிங்கக் கண்ணா !

சாமரம் வீசியே செந்தமிழ்ச் சொற்களால்
சந்நிதி வந்தேன் செங்கமலிச்  சீதரா !
முன்னிரு  மாதவா ! பின்னிரு நாரணா !
பொன்னிரு பாதங்கள் போற்றுவேன் பணிவுடன் !

  



மார்கழி மணாளன்  (2)
திருநீரகம் -அருள்மிகு உலகளந்த பெருமாள்
ஆலிலை அமர்ந்த அழகுடைக் கண்ணா
காலினைக் கையில் ஏந்திய குழந்தாய்
மண்ணுடை வாயில் மாயைகள் படைத்தோய்
மாலனே ! பாலனே! மார்கழி நாதனே !

பாசத்தில் வறண்ட பக்தர்கள் நெஞ்சில்
பாய்ந்து செல்லும் பரமனே பங்காளா !
பாலுடை ஆவினம் கோலுடை கோபியர்
பரவசமாகிக் கூடிடும் குழலுடை கோபாலா !

முப்பொருள் தன்னில் உட்பொருள்  நீயே
மூன்றில் இரண்டும்  முழுதும் நீயே
முதலுக்கும் முடிவுக்கும் முகவுரை நீயே
முகுந்தா! அரங்கா ! முன்னின்று காப்பாய் ! 

நீரினில் பிறந்தாய் நீரினில் கிடந்தாய்
நீரினில் கூர்மனாய் மேருவைச் சுமந்தாய்
நீரினில் மலர்ந்த அலைமகள் மணந்தாய்
நீருடை வண்ணம் ஊனுடை அணிந்தோய்  !

கனியில் காயில் கவர்ந்திடும் மலரில்
கலங்கிய சுனையாய் கண்விடும் நீரில்
காவிரி நதியினில் கயிலனின் சிகையினில்
கருவறை உயிரினில் கருணையாய்  நின்றாய் !

வாடிடும் பயிர்போல் வறண்டிடும் வாழ்வில்   
உலர்ந்திடும் உணர்வுகள் ஒடுங்கிடும் முன்னே
மடைவிடு வெள்ளமாய் மாதவா வருவாய்
மலர்ந்திடு  மனதினில்  மணத்துடன் கண்ணா !






மார்கழி மணாளன்  (3)
திருவெக்கா  - அருள்மிகு சொன்னவண்ணம் வந்த பெருமாள்

இறைபாடும் கவிதன்னை இழிவாக மதிப்பிட்டு
இசைபாட அழைத்திட்ட புவியாளும் மன்னவனை
இரவோடு இரவாக அரவோடு விட்டொழித்து
இடம்மாறி படுத்துறங்கி மனமாண்ட மாதவனே !

சொன்னவண்ணம் வந்த பெருமாளே சுதர்சனா
சொல்லமால் வருவாயோ சுமைகள் இறக்கிடவே ?
சொந்தமென்று உனையன்றி அழைத்திடவே யாருண்டு
சொர்கமன்றோ உன்பாதம் நினைத்தாலே பலனுண்டு !

காலங்கள் அனைத்திற்கும் கதிகாட்டப் பிறந்தாயே
கோளங்கள் அனைத்திலுமே குடியிருக்க வந்தாயே
கோலங்கள் ஆயிரமே கோபாலா கொண்டாயே
கோமளத்தை  நெஞ்சில்   கோவிந்தா ஏற்றாயே  ! 

எட்டாத பாற்கடலில் இமைமூடிக் கிடந்தாலும்
ஏடுடைய நான்முகனை ஏதுவாய் காத்திடவே
எட்டுகைகள் ஏந்தி வந்தாய் எம்பெருமானே
ஏங்குகிறேன் வருவாயோ ஏற்றங்கள் தந்திடவே !

போகமதில் புலன்முழுக தாகத்தில் தவித்திரிந்து
வேகமுடை வாழ்வினிலே வேடங்கள் போட்டிருந்தேன்
வேகவதி தடுத்தவனே! வேதங்கள் காத்தவனே !
வேண்டுகிறேன் வந்திடுவாய் வேதனைகள் விலகிடவே !

இலைமறைவுக்  காயாக தலைமறைத்து நின்றாலும்
இணையில்லாக் கருணை இதயத்தில் கொண்டாயே
இசையில்லா ஓசையென அசைவின்றி நிற்கின்றேன்
திசைமாறிப் படுத்தாலும் இசைவாகக் கைகொடுப்பாய் !




  

மார்கழி மணாளன்  (4)

திரு இந்தாளுர்  -  அருள்மிகு பரிமள ரங்கநாதப் பெருமாள்
அணிதலை நாகனும் அமைதியைக் காத்திட
அலைமகள் நிலமகள் அடிகளைப்  போற்றிட
அரங்கத்தில் அயர்ந்த அமரனே எழுந்திரு
அரியணை நெஞ்சினில் அழகுடன் அமர்ந்திடு !

மதிகெட்டு மதிபெற்ற சாபம் விலக்கினாய்
முனிசெய்த சதிநீக்கி முன்னவன் காத்தாய்
விதிமாற்றி நதிதன்னைத் தலைமீது வைத்தாய்
பனிநீக்கும் பகலவனாய் துயர்தீர்க்கும் பரிமளா !

கல்லுறை நிற்பதை கணத்தினில் விலக்கி
வானுறை வேங்கடா விழியினில் நிற்பாய்
ஊனுறை உணர்வினால்  உன்னையே போற்றிட
மூதுரை முத்தமிழ் மூச்சிடை வைத்தேன் !

ஊதிடும் குழலுக்கு உருகிடும் உலகினில்  
ஆடிடும் கோபியர் போலவே போதையில்     
பேசிட மொழியின்றி பரவசம் கொண்டேன்
நாசியில் மூச்செல்லாம் நடனங்கள் ஆடுதே  !

கூடியகைகள்  உன்னைக் கூப்பியே நிற்கும் 
குரலென்றும்  உன்பெயர் கூறியே ஒலிக்கும்
குவிந்திட்ட விழிகளில் நின்னெழில் நிறையும்
குறையின்றி வாழ்ந்திட நின்னருள் வேண்டும் !

பாய்முனை படித்தபின் பதறிடும் நெஞ்சம்
நோய்முனை தவிர்த்திட  உன்னிடம்  தஞ்சம்
தாய்முலை தேடியே தாவிடும் சேயென
வாயினில்  வந்தேன் வழங்கிடு பரிமளா !







மார்கழி மணாளன்  (5)

திருப்பாற்கடல் (காராபுரம் )- அருள்மிகு பிரசன்ன வெங்கடேசப் பெருமாள்

அரனோடு  அரியும் ஒன்றென்ற தத்துவத்தை
ஆவுடையார் மேலிருந்து அடியார்க்குச் சொன்னவனே !
அறியாது பிரிந்திருக்கும் அடியார்கள் அரவணைத்து
அழியாத அன்பிற்கு இலக்கணம் படைத்தவனே !

ஆழ்கடல் வாழ்வினிலே தத்தளிக்கும் அடியார்கள்
அருளிட்ட சாசனங்கள் அமைதியாய் கேட்டாயோ
பாற்கடலை விட்டிங்கே வந்ததேன் பரந்தாமா
பாசுரங்கள் கேட்டபின்னும் அரங்கா உறங்கலாமா?

ஐம்பொறியும் ஐம்புலனும் உன்வசமே ஆனந்தா
ஐயமில்லை உன்னையன்றி உறவுமில்லை கோவிந்தா !
ஐங்கரனின் அறுமுகனின் அன்னையின் சோதரனே !
ஐயம்கொண்ட புண்டரீகன் ஆட்கொண்ட வேங்கடனே !

ஒப்புயர்விலா உத்தமனே! முப்புரியும் அளந்தவனே!
செப்புமொழி அத்தனையும் சிதறாமல் தந்தவனே !
எப்பெயரில் அழைத்தாலும் அப்பெயரில் அமைபவனே
உப்பரிகை தேவையில்லை உளமறிந்தால் போதுமையா!

கல்லான அகலிகையின் சாபம் விடுத்தாய்
காதலுடை துளசிக்கோ தன்னைத் தந்தாய்
கனிவுடைய சபரிக்கோ கருணை தந்தாய்
கார்மேகா ! கதறுகிறேன் காத்திட வருவாயே !

ஒருபொழுது உனைநினைக்க  உளம்நாடும் மறுபொழுதும்
மறுபொழுதும் உனைநினைக்க மனம்தேடும் முப்பொழுதும்
முப்பொழுதும் உனைநினைக்க முன்னிருப்பாய் நாட்பொழுதும்
நாட்பொழுதும் நாரணனே எப்பொழுதும் எம்பெருமானே !


 மார்கழி மணாளன்  (6)
திருக்காவலம்பாடி - அருள்மிகு கோபாலகிருஷ்ண பெருமாள்

ஊழிக்கூத்தன் ஒருகால்தூக்கி ஆடினான் ஆடினான்
ஆழிகளாட அண்டங்களாட அவனிகளாட  அந்தோ !
அங்கங்களாட அரவமுமாட  அகிலத்தில் அரனின்
தக்கத்திமிதோம் தாம்திமி தக்கத்திமி தாம்தோம் !

வெகுண்ட சிவனின் விழிவழி நெருப்பில்
மருண்ட அமரர் வேதியர் தந்தனர் வந்தனம்
சிதறுண்ட சிகையோ சீண்டிய நிலத்தில்
சிவமே சதாசிவமே பதினோரு சிவமே !
பித்தோடு ஆடியபாதங்கள் அமைதியை நாட
பற்றோடு அரங்கா ! பாரினைக் காத்தாய்
பத்தோடு பதினொன்றாய் பிறக்கா வண்ணம்
பற்றோடு பதினொன்றில்  பக்கத்தில் நின்றாய்  !

சத்தியத்தின் உருவமே ! சாந்தனே! சகலனே!
நித்தியத்தின் தத்துவமே ! நீலனே! நாரணா !
வித்தைகள் கடந்த வேதத்தின் மூலமே !
வேண்டினேன் வந்திடு விடியலைக் காட்டிடு!

சிலையென நினைத்தேன் சிறுமதி சுருங்கிட
கலையென நினைத்துக்  கல்லுள் வடித்தேன்
மலையென நின்றாய் திருமலைத் தேவா !
இலையெனச் சொல்லா அருள்மழை அரங்கா!

கவளமாய்த்  தருவேன் காதலால்  என்னையே
பவளமே! பரிமளா ! பாசமாய் அணைத்திடு
குவலயம்  ஈடில்லை  கோவிந்தன்  அருளுக்கு
நிலுவையில் வைப்பதோ நின்னருள் எனக்கு?



  

மார்கழி மணாளன்  (7)
திருப்பேர்நகர் - அருள்மிகு அப்பக்குடத்தான் பெருமாள் கோவில்

திருப்பேர் தனக்கொரு ஆயிரம் கொண்டாலும்
திருப்பேர் தன்னில்  புதுப்பேர் கொண்டோனே !
முப்பேறும் தருகின்ற திருப்பேரா ! முகுந்தா !
எப்பேறும் இல்லாமைக்குத் தப்பேதும் செய்தேனோ ?

உப்பேதும் இல்லாமல் உணவருந்தி மகிழ்ந்தாய்
ஒப்பில்லா வயதினிலும் உளமறிந்து மணந்தாய்
தப்பாமல் தருமங்கள் காத்திடப் பிறப்பவனே
அப்பா!! அமுதா !! அனந்தா! அருளாளா !!

ஒருவாசம் இல்லாத வனவாசி துர்வாசர்
தருசாபம்  பிணியாகத் தவித்தானே உபமன்யு
நூறாயிரம் உணவிட்டு நூலான மன்னனிடம்
மூதான வடிவத்தில் முன்னின்ற முப்புரனே!

 உலைகண்ட உணவெல்லாம் ஒருபோதில் உண்டாயே
இலையென்று சொல்லாத மன்னவனும் மலைத்தானே !
மடைதன்னில் நெய்யப்பம் ஒருகுடத்தில் படைத்தே
கொடையாகக் கேட்ட கோவிந்தா! அப்பக்குடத்தானே !

அறிந்தேன் உனையென்று அடியார்கள் ஆயிரமே 
கனிந்தே பாடிநின்றார் பாசுரங்கள் நாலாயிரமே 
மருந்தே ! மாமணியே ! மனங்கவர் மாதவனே !
மறைந்தே நின்றாய் மாதவத்தார் மனத்துள்ளே !

பனிக்குடம் பிரிந்தபின் பண்படாத வாழ்க்கை 
இருப்பிடம்  தேடி  எங்கெங்கோ  அலைந்ததே !
உறைவிடம் நீயேயென உள்ளமே அறிந்தபின் 
நிறைவுடன் நின்பாதங்கள் தேடியே வந்ததே !



மார்கழி மணாளன்  (8)

நாச்சியார் கோயில் -(திருநாரையூர் நம்பி திருக்கோயில்) அருள்மிகு ஸ்ரீனிவாசப் பெருமாள்

பெண்ணுயர  முன்னுரிமை மணவறையில் தந்தாய்
விண்ணுயர வாழ்ந்தாலும் மனமுயர்ந்தே நின்றாய்
தானுயர்ந்தே  தாளால் திரிபுரமும் அளந்தவனே
நானுயர அருள்வாயோ நாரையூர் நாராயணனே !

காரிகை மணமுடிக்கக் கையேந்தி நின்றவனே
பேரிகை முழக்கமின்றி பிடித்தவளை மணந்தவனே
தூரிகை  வரையாத தூயவனே பேரழகா !
நாழிகை நகர்வதுவே  நின்னருளால் மட்டுமன்றோ ?

சங்கோடு சக்கரமும் அங்கமெல்லாம் அணிகலனும்
பங்கமில்லாப்  பார்வையுடை செங்கமலச் செல்வா !
மங்காத ஒளிகொண்ட மங்கையவள் மணந்தவுடன்     
தங்கிடவே  நெஞ்சத்திலே மஞ்சமதைப் படைத்தாய் !

அன்னமென அன்னையவள் அழகாக முன்செல்ல
பின்னமின்றி அவள்நினைவைப் பின்னெடுத்து நீசெல்ல
நின்றபடி ஆழ்வார்கள் நிலைமற்ந்து கவிசொல்ல
வென்றிடுவார் வாழ்வெல்லாம் கண்டவர்கள் களிந்து.

புள்ளாகப் பிறந்தாலும் புவியாள வேண்டும்
வில்லாளன் நல்லோனின் சுமைதாங்க வேண்டும்
கல்லாகப் பிறந்தாலும் கண்ணன் வடிவாகவேண்டும்
கணநேரம் வாழ்ந்தாலும் கார்மேகன் குழலாகவேண்டும் !

பல்லாண்டு பாடிப் பரவசமான நெஞ்சில்
நில்லாமல் நினைவெல்லாம் நின்பாதம் நாடும்
புண்ணான வாழ்க்கைக்குப் புரியாத மருந்தே
கண்ணாக நானிருக்க ஒளியாக நீவருவாய் !



மார்கழி மணாளன்  (9)

திருப்பார்த்தான்பள்ளி  - அருள்மிகு தாமரையாள் கேள்வன் பெருமாள் 

காவிரியைக் கமண்டலத்தில் கசிவின்றி அடைத்தவன்
கயிலையின் திருமணத்தைப் பொதிகையிலே பார்த்தவன்
கரையில்லா ஆர்வத்துடன் கலைகளெல்லாம் கற்றவன்
கடுந்தவத்தில் தனைமறந்து மகிழ்ந்தான் அகத்தியன்

பார்த்தனுக்கே பருகிடவே நீரின்றிப் பார்த்தவனும்
படைத்தவனை வேண்டிடவே பரிந்துரை செய்திடவே
பங்கயச் செல்வியின் பார்வையுடை கோவிந்தன்
பாண்டவனுக்கு  அருளிடவே பாற்கடலைத் துறந்தான் 

போர்முனை எதிரிகள் போல்வரும் உணர்வுகள்
வாள்முனை அச்சத்தில் வளர்ந்திடும் கனவுகள்
தேர்முனை பார்த்தவன் திசையின்றி நின்றிடவே
ஊழ்வினை களைந்திட உத்தமனை அழைத்தானே !

போர்முனையில் அறம்காக்கக்  கீதையைச் சொன்னவன்
விதிமுனையில் மனம்காக்க வாழ்க்கையைச் சொன்னான்
தோள்முனையில் துளிர்த்திட்ட வல்லமைகள் வீழ்கையிலே  
வாழ்முறையில் வளம்காக்க மறைசொன்னான் மாதவனே !

பொருளில்லா வாழ்க்கைக்குப் புவியில் இடமேது
பொருள்மட்டும் தேடுகின்ற மனத்திற்குப் புகலேது
புகலொன்றே பார்த்தா பொற்பாதம்! இணையேது
புரிந்தாலே மன்னுயிர்க்கு மண்ணுலகில் முடிவேது  ?

விண்ணெல்லாம் அலைந்தாலும் விடையறியா அமரர்கள்
மண்ணெல்லாம் அலைந்தாலும்  மனதறியா மாந்தர்கள்
கண்ணெல்லாம் ஒளியாக்கிக்  கல்லுள்ளே பார்த்தாலும்
தன்னுள்ளே வைத்திருந்தால்  தவறாது வந்திடுவேன் ~”


  

No comments:

Post a Comment