Sunday, July 26, 2015

"என் பெயர் சீதாராமன்"
சிறுகதை   . பாலசுப்ரமணியன்

பரசுராமன் என்றாலே அந்த வட்டாரத்தில் ஒரு தனி மரியாதை. சின்ன வயதிலிருந்தே மிகவும் கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்தவர் என்று அவர்களுக்குத் தெரியும். எப்போதும் வெள்ளைச் சட்டை, வெள்ளை பான்ட் அல்லது வெள்ளை வேஷ்டி ..நெற்றியில் திருநீறு.... நடுவில் ஒரு சந்தனப் பொட்டு. சிரித்த முகம். அவர் காலையிலே தன்னுடைய கைப்பையை எடுத்துக்கொண்டு வரும் பொழுது இரு பக்கங்களிலும் இருக்கும் கடைக்காரர்கள் எழுந்து நின்று  அவருக்கு வணக்கம் செய்வதைப் பார்க்கும் போது, கோவில்  விழாக்களில் உற்சவர் உலா வரும்போது  இரு மருங்கும் வழிபாட்டுக்கு நிற்பவர்கள் போன்ற ஒரு தோற்றம் இருக்கும்.

திருப்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அவர் முதல்வர். " அவருக்கு கோபமே வராதுஇது அவருடன் வேலை பார்ப்போரின் தீர்ப்பு. "ஆனால் அவர்  கண்டிப்பானவர்", இது பெற்றோர்களின் தீர்ப்பு.

"பசங்களெல்லாம் அவர் வரார் என்றாலே கொஞ்சம் ஓரமா ஒதுங்கி நிற்பார்கள். பயமில்லே, ஓரு பக்தி" இது சில ஆசிரியர்களின் கணிப்பு.

" வணக்கம் சார்பள்ளிக்குள்ளே நுழைந்து கொண்டிருந்த அவரைப் பார்த்த பியூன் பெருமாள் அவரிடமிருந்து கைப்பையை வாங்கிக்கொண்டு அவர் அறையை நோக்கி முன் சென்றான்.

"சார் வந்துட்டார்" .. போருக்கு முன் முரசு ஒலிப்பது போல் அவர் வருகையின் அறிவுப்பு உள்ளே சென்றது.

" வணக்கம் சார்.. " இது அவருடைய பள்ளியின் மூத்த ஆசிரியர். நல்லாசிரியர்  விருது பெற்றவர்.

"வணக்கம் சம்பந்தம் சார். " என்று சொல்லிக்கொண்டே சென்ற பரசுராமனின் பார்வை அங்கு வரும் பெற்றோர்களுக்காகப் போடப்பட்டிருந்த இருக்கைகள் மேல் விழுந்தது.

அங்குள்ள பெஞ்சில் உட்கார்ந்திருந்த அவர் கழுத்தும் கைகளும் ஆடிக்கொண்டே இருந்தன. "பார்கின்சன் வியாதி" என்று எல்லோராலும் சொல்லப்படும் அந்த
நோயின் அடையாளங்கள் வெளிப்படையாகத் தெரிந்து கொண்டிருந்தது. அவர் அருகில் ஒரு மாணவி அமர்ந்திருந்தாள். அவள் பள்ளிச் சீருடை அணிந்திருந்தாள்.

தன் அறையுள் நுழைந்த பரசுராமன் " பெருமாள், அந்தப் பெரியவர் யாருப்பா?" என்றார்.

"சார், அவர் உங்களைத்தான் பார்க்கவேண்டுமென்று பிடிவாதமாக இருக்கிறார்."

"என்ன விஷயம்?"

"ஏதோ ஸ்கூல் பீஸ் பற்றி பேச வேண்டுமாம்."

"ஆபீசிலே பேசச்சொல்லறதுதானே"

"இல்லே சார், உங்க கிட்டேதான் பேசணும் என்று பிடிவாதமாக இருக்கிறார்."

"சரி. வரச்சொல்லு." என்று சொல்லிக்கொண்டே தன் லாப்டாப்பைத்  திறந்தார்.

சில நொடிகளில் அந்தப் பெரியவர் பரசுராமனின் அறைக்குள் நுழைந்தார்.
சாதரணமாகவே எல்லோரையும் அன்புடனும் மரியாதையுடனும் வரவேற்கும் பண்புடைய பரசுராமனுக்கு அன்று ஏனோ ஒரு இனம் தெரியாத உள்ளுணர்வு ஏற்பட்டதுதன் இருக்கையிலிருந்து எழுந்து உள்ளே நுழைந்த பெரியவரின் கைகளைப்பிடித்து "அமருங்கள்" என்று சொன்னார்.
அவருடைய செல்போன் ஒலித்தது. அவர் அதில் பேச ஆரம்பித்தார். சில நிமிடங்கள் கடந்தன. அந்தப் பெரியவர் பரசுரமனையே பார்த்துக் கொண்டிருந்தார். பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது.

"என் பேரு சீதாராமன்." 

பரசுராமன் கைகளால் அவருக்கு கொஞ்சம் பொறுமையாகக் இருக்கும்படிகேட்டுக்கொண்டார். .. பேச்சு தொடர்ந்தது.

"என் பேரு சீதாராமன்

"கொஞ்சம் வெயிட் பண்ணுங்க சார்."  செல்போனில்  பேச்சு தொடர்ந்தது.

பெரியவரின் முகந்த்தில் ஒரு ஏமாற்றம் தெரிந்தது.

"ம் ... சொல்லுங்கோ.." பரசுராமன் பேச்சை முடித்துக் கொண்டு பெரியவரைப் பார்த்தார்.

"என் பேரு சீதாராமன்"

"அதான்  ரெண்டு தடவை சொல்லிட்டீங்களே.... என்ன வேணும்?"

"எனக்கு உங்க அப்பாவைத் தெரியும்."

பரசுராமனுக்கு அதிர்ச்சி. " சார், யாரைத் தெரிந்தால் என்ன? பர்சனல் விஷயமெல்லாம்  வேண்டாம்...... என்ன வேணும்னு சொல்லுங்க.?"

"நீங்க கோபிசெட்டிப்பாளையம்தானே?. "

பரசுராம் தன் கண்களை உயர்த்தி ஒரு முறை அவரைப் பார்த்தார். பெரியவர் பேசுவது அவருக்குப் பிடிக்கவில்லை என்று வெளிப்படையாகத் தெரிந்தது.

"உங்கப்பா கோபிச்செட்டிப்பாளையம் போர்டு ஸ்கூல் ஆர்ட் வாத்யாரக இருந்தாரில்லேயா?"

பரசுராமனுக்கு கொஞ்சம் ஆர்வமும் கொஞ்சம் பயமும் வந்தது. " இவர் என்ன சொல்ல விரும்பிகிறார். நம்மதான் ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே அங்கிருந்து கிளம்பியாச்சே."

"சொல்லுங்க. என்ன வேணும்?"

தன் பேச்சு அவருக்குப் பிடிக்க வில்லை என்று உணர்ந்து கொண்ட பெரியவர். ."இவ என் பேத்தி. உங்க ஸ்கூல் ஸ்டுடென்ட்.. எட்டாம் கிளாசிலே படிக்கறா. எட்டு பீ.."

"உம் .."

"இன்னிக்கு மே 7 ம் தேதி. பீஸ் கட்ட கடைசி நாள். என் பையன், இவ அப்பா, மார்க்கெட்டிங் மேனேஜர் ஓரு மெடிக்கல் கம்பெனியிலே. .. ஒரு மீட்டிங்கிற்காக   துபாய் போயிருக்கார். வர நாலு ஐந்து நாள் ஆகும். அதுனாலே உங்க கிட்ட கொஞ்சம் அவகாசம் கேட்கலாம் என்று வந்தேன்."

"சாரி சார். இது மானேஜ்மென்ட் ஆர்டர். நான் ஒண்ணும் பண்ண முடியாது. எனக்கு இதை மாற்றிடும் அதிகாரம் கிடையாது. பணம் கட்டவில்லை என்றால் ரெஜிச்டெர்லெந்து பெயரை நீக்கிடுவா. நீங்கதான் ஏதாவது ஏற்பாடு பண்ணனும்."

பெரியவரின் முகம் வாடியது. "இவ்வளவு பணத்துக்கு திடீர்னு நான் என்ன பண்ணுவேன்?"

"அதான் சொன்னேன். உங்க அப்பாவை எனக்கு நன்றாகத் தெரியும் என்று."

சற்றே நிதானத்தை இழந்த பரசுராமன்.. " என்ன தெரியும்? எப்படித் தெரியும்?"

"அவர் போர்டு ஸ்கூல் ஆர்ட் டீச்சராக இருந்த போது அந்த போர்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் போஸ்ட்ல நான் இருந்தேன். .. "

பரசுராமனுக்கு 440 வோல்ட் ஷாக் அடித்த மாதிரி இருந்தது.. "நீங்க போர்டு ஸ்கூல் ஹெட்மாஸ்டரா? "

"ஆமாம். என் பேரு சீதாராமன். அவரோட பையன் கூட எங்க பள்ளிக்கூடத்திலேதான் படித்தான். பெயர் ஞாபகமில்லே" அவர் சொற்கள் தடுமாறின

பரசுராமன் உடல் வியர்த்தது.

1962... அவருடைய வீட்டிலே ஒரு விழா. அப்போது அவருக்கு ஆறு வயது.. கோபிசெட்டிப்பாளயத்தில் கூட்டுக்குடும்பம். பெரிய குடும்பம். அன்று வீட்டிலே மாவிலைத் தோரணங்கள் கட்டி இருந்தனர். வாசல் திண்ணையில் நாதஸ்வரம் ஒலித்துக்கொண்டு இருந்தது. வேதியர் மந்திரம் ஓதிக்கொண்டிருந்தனர்.

பரசுராமனுக்கு எண்ணை நீராட்டி புதுத்துணி உடுத்தி திலகமிட்டு  மாலை போட்டு ஊர்வலமாக அழைத்துச்சென்றனர். ஆம்! "வித்யாரம்பமாம்.."பள்ளிக்கூடத்தில் அன்றுதான் அட்மிஷன்.

அவருடைய தந்தை வேதாசலம் தன் மகனைத் தோளில் தூக்கிக்கொண்டு பள்ளிக்கூடம் அழைத்துச் சென்றார்.

தன் அறையிலிருந்து வெளியே வந்த அந்த ஹெட்மாஸ்டர் அந்தப் பையனைத் தன் தோள்களில் வாங்கிக்கொண்டு உள்ளே அழைத்துச்சென்று தன் மடியில் அமர்த்திக்கொண்டார்.

ஒரு தாம்பாளத்தில் அரிசியும் மஞ்சளும் வைக்கப்பட்டிருந்தது. அந்தச் சிறுவனின் கைகளைப் பிடிதிக்கொண்டு  " " என்ற எழுத்தை எழுதி கல்வியைத் தொடக்கி வைத்தார்.

பரசுராமனின் நினைவலைகள் பின்னோக்கிச் சென்றன. ..அவர் உடல் வியர்த்தது,,,

"நீங்கள் அந்த சீதாராமனா?" 

தன் இருக்கையிலிருந்து எழுந்த பரசுராமன் கண்களில் நீர்மல்க அந்தப் பெரியவரின் கால்களைத் தொட்டு வணங்கினார். " அய்யா. நீங்கள் தானே உங்கள் மடியில் என்னை உட்கார வைத்து முதல் எழுத்தான அகரத்தை  எழுதத் தொடிங்கி வைத்தீர்கள். " கண்களில் நீர் வழிந்து கொண்டிருந்தது.

அவருடைய ஆடிக்கொண்டிருந்த கைகளை கொஞ்சம் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டார். "எனக்கு எழுதச் சொல்லிக்கொடுத்த கைகள் இவை. இன்று நடுங்குகின்றன?" அவர் மனம் துடித்தது.

" பெருமாள்." தன் உதவியாளரை உள்ளே அழைத்தார். "கொஞ்சம் காஷியரை வரச் சொல்லுப்பா."

அவர் உள்ளே வந்ததும் "சபாபதி, நீங்க இந்த பொண்ணோட விவரங்களை வாங்கிக் கொள்ளுங்க..நான் செக் எழுதித்தறேன். அப்புறம் இந்தப் பெண்ணோட அப்பா ஊர்லேந்து வந்ததும் என்னைப பார்க்கச் சொல்லுங்க."

"என் பெயர் சீதாராமன். உங்களுக்கு ஞாபகம் இருக்குமோல்லியோ?" 

பெரியவரின் பெயர் பரசுராமனுக்கு மறக்குமாயென்ன?

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx




No comments:

Post a Comment