இதுவும் ஒரு ஜனனம்
சிறுகதை -- க.
பாலசுப்ரமணியன்
மாலை விடை பெற்றுக்கொண்டிருந்தது.
கிழக்கே இருள் படர மேற்கில்
மட்டும் சில சிவப்புகொடுகள் வானத்தைக்
கீறிக்கொண்டிருந்தன. அந்தச்
செவ்வானை நோக்கியவாறே கீதா மாடியில் அமர்ந்து
கொண்டிருந்தாள். அந்தத் தனிமை அவளுக்கு
ருசியாக இருந்தது.
"கீதா, கீதா" என்று கீழேயிருந்து அம்மா
அழைத்தது அவள் காதுகளில் விழுந்தது.
இந்தத் தனிமையின் சுகம் அம்மாவுக்குத் தெரியுமா
என்ன? இந்த
நேரத்தில் தானே நான் கொஞ்சம்
மனம்விட்டு என்னோடு பேசமுடிகிறது? இந்த
அனுபவமே அலாதிதான்! அம்மாவுக்கெல்லாம் இதைப் பற்றி என்ன
தெரியும்? கீதா அங்கலாய்த்துக் கொண்டாள்.
"வந்துட்டேம்மா" என்று சொல்லிக்கொண்டே அவள்
எழுந்தாள். "அப்போ
நான் வரட்டுமா?. பாய் பாய் .. நாளைக்கு
மறுபடியும் உன்னோடு பேசறேன்" தனக்குத்தானே
சிரித்துக்கொண்டாள் .
அவள் யாரோடு பேசினாள்
என்றா யோசிக்கிறீர்கள்?.
உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அவள் தன் வயித்திலே
சுமந்து கொண்டிருக்கும் அந்த நான்கு மாதக்
கருவுடன் தான் பேசிக்கொண்டிருந்தாள். வியப்பாக இருக்கிறதா?
அவளுக்கு இது வியப்பில்லை...
சில மாதங்களுக்கு முன்
அவள் ஒரு பத்திரிகையில் படித்திருந்தாள்
.....-
"ஆப்பிரிக்காவிலே ஒரு ஆதிவாசிக் கூட்டத்தில்
ஒரு பெண் கருவுற்றவுடன் தனியாகச்
சென்று ஒரு மரத்தடியில் அமர்ந்து
அந்தக் கருவுக்காக ஒரு பாடலை இசையுடன் பாடுவாள். அந்தப்பாட்டு அவள் கற்பனையில் தோன்றியதாக
இருக்கும்.
நித்தம் அவள் தனியாக
அந்த வருங்காலக் குழந்தைக்காக படுவாள். அந்தக் குழந்தை பிறந்த
போதும் மற்றும் அந்தக் குழந்தையின்
வாழ்வில் நடக்கும் முக்கியமான நிகழ்வுகள் போதும் அந்தப்ப் பாடல்
பாடப்படும். குழந்தை வளர்ந்து திருமணமாகும்
போதும் அதன் உடல் இந்த
உலகை விட்டுப் போகும் வரைக்கும் அந்தப்ப்
பாடல் அந்தகக் குழந்தைக்கு ஒரு
முத்திரைப் பாடலாக இருக்கும்."
மறுநாள் மாலை சற்று
முன்னதாகவே கீதா மாடிக்கு வந்துவிட்டாள்.
அவள் கையில் ஒரு ஐ
போன் இருந்தது..
இன்னிக்கு நான் உனக்கு எம்
ஜீ ஆர் பாட்டுப் போடறேன்" என்று சொல்லிக்கொண்டு, அந்த
செல் போனில் "சிரித்து வாழ வேண்டும்" என்ற
பாட்டைப் போட்டுக் கொண்டே " இது
தான் லைப். சிரிக்கத்தான் பொறக்கணும்.
என்னமாதிரி எப்போதும் மூலையிலே உட்கார்ந்துகொண்டு ஏதோ வாழ்க்கையே இடிஞ்சு
போன மாதிரி உம்முன்னு இருக்கக்
கூடாது.. என்ன?" அவள்
கேள்விக்குப் பதில்
கிடைக்கவுமில்லை. அதை அவள் எதிர்
பார்க்கவுமில்லை.
"என்ன, நான் ஏன்
உம்முன்னு இருக்கேன்னு கேட்கிறையா? அதெல்லாம் உனக்குப் புரியாது. நீ வெளில வந்து
கொஞ்ச வருஷம் ஆன பின்னாலே உனக்குப்
புரியும். இப்போதைக்கு நீ எம் ஜி
ஆர் அட்வைஸைக் கேளு. சிரிச்சுண்டே இருக்கணும்"
"நீ என்ன ஆகணும்னு
நினக்கிறே?" அவள் கேள்வி தொடர்ந்தது...
"கீதா. விளக்கேத்தியாச்சு. .இனிமே
மேலே இருந்தா காத்து
கருப்பு அடிக்கும். சீக்கிரம் கீழே வா." அம்மாவின்
குரல் மீண்டும் கேட்டது.
"கேட்டியா? காத்து கருப்பு அடிக்குமாம்.
அது வேற அடிக்கணுமா என்ன?
வாங்கற அடியெல்லாம் வாங்கியாச்சு. இன்னுமே காத்தாவது கறுப்பாவது?
அதுக்கெல்லாம் நீ பயப்படதேடா கண்ணா..நான் இருக்கும் வரைக்கும்
எதுவும் உன்னை ஒண்ணும் பண்ணாது. தைரியமாக
இரு.
" மெதுவாகக் கீழே இறங்கினாள் .
"பாத்து வா கீதா.
இந்த நேரத்திலே தான் தலை சுற்றல்
மயக்கம் எல்லாம் வரும். மாடியிலே
இருந்து வரும் போது ஜாக்கிரதையாக வரணும். அங்கே போகதேன்னா
நீ
கேட்கப் போறதில்லே." அம்மாவின் அங்கலாய்ப்பு .
கீதாவுக்கு இரவில் தூக்கம் வரவில்லை.
வயற்றில் ஏதோ சுற்றிவருவது போன்ற
உணர்வு.."என்னடா.. அலைந்துகொண்டிருக்கே? பசிக்கறதா? இது ராத்திரி நேரம்..
சாப்பிட முடியாது.. உனக்கென்ன....பகல் ராத்திரியெல்லாம் ஒண்ணுதான்
.. என்ன கிடச்சுதோ, அதை
சாப்பிட்டிக்கோ.."
நாளொருமேனியும் பொழுதொருவண்ணமுமாக அவர்கள் நட்பும் உறவும்
வளர்ந்தது.. உள்ளே அந்தக் கரு
சிரிப்பதையும் படபடப்பதையும் அவளால் உணர முடிந்தது.
ஒரு நாள் மாலை.
அவள் அருகில் இருந்த பார்க்கில்
நடந்து கொண்டிருந்தாள். "முடியலேடா. டாக்டர் லோ
பி பீ என்கிறார்.
தினசரி
ஒரு மணி நேரமாவது நடக்கணும்னு
சொன்னார்.
நான் நடந்தா உனக்கு நல்லதாம். அப்போ நான் கண்டிப்பா
நடப்பேன்.
நீ கவலைப்படாதே. நீ பெரியவனானவுடனே உன்
கையைப் பிடித்துக்கொண்டு நடக்கறேன் சரியா?
ஒரு நிமிடம் அவள்
நினைவுச் சக்கரம் நின்றது. தனக்குத்
தானே ...சிரித்துக் கொண்டாள்.
"என்ன
அசட்டுச் சிந்தனை. அவன் கையப்பிடுத்துக்கொண்டு நான் நடக்கறதாவது
......" மீண்டும் வலியுடன்
சேர்ந்த ஓர் புன்னகை.
இரண்டு மாதங்களுக்கு பிறகு
ஒரு நாள்....
"ஏண்டா.. உனக்கு கைகால்களெல்லாம்
முளைச்சுடுத்தா? உள்ளே நீ ஏதாவது
உடல் பயிற்சி செய்யறயா?
உடம்பை பிட்டாக
வைத்துக்கொள்ளணும். நாலு பேருக்கு பதில்
சொல்லற நிலைமையிலே என்னை வைக்காதே.. புரிஞ்சுதா.."
"
ஆமா.. நான் பாட்டுக்கு "டா"
போட்டுப் பேசறேனே..
நீ "டா" வா, இல்லே
"டீ " யா? என்னவா இருந்தா
என்ன? இன்னிக்கு பெண் பிள்ளைகள் கூட
"டா " போட்டுத்தான் பேசிக்கறா.." மீண்டும்
கீதா தன் மனதுக்குள் சிரித்துக்
கொள்கிறாள்.."
நாட்கள் ஓடின... ஒருநாள்
'அம்மா' என்று அவள் அலற,
கீதாவின் தாயார் தன் பக்கத்து வீட்டுக்
காரரிடம் "சார். கொஞ்சம் ஹெல்ப்
பண்ணுங்கோ.. அவளுக்கு வலி வந்துடுத்து.. பக்கத்து
ஆஸ்பத்திரிக்கு கொஞ்சம் கூட்டிக் கொண்டு போகணும். ஓர்
டாக்ஸி வேண்டும்... "
கீதாவுக்கு சுகப் பிரசவம். ..
"பேரன் பிறந்திருக்கான்.." நர்ஸ் குழந்தையை
ஏந்திக் கொண்டு வெளியே வந்தாள்
அருகில் நின்ற ஷாலினி
' சுபாஷ். பார்த்தேளா, குழந்தை உங்களைப் போலவே
இருக்கு.."
நர்ஸ்
சுபாஷையும் கீதாவின் தாயின் முகத்தையும் தீர்க்கமாகப் பார்த்தாள்
வெளியே வந்த டாக்டர்
மாலினி " வாழ்த்துக்கள் சுபாஷ். குழந்தை
நல்ல ஹெல்த்தீயாகப் பிறந்திருக்கு. ஒரு
ஒரு வாரம் குழந்தைக்குத் தாய்ப்
பால் கொடுத்தபின்னே நீங்கள் எடுத்துச் செல்லலாம்."
டாக்டரைப் பார்த்து
சுபாஷ் "இன்னிக்கே எடுத்துக்கொண்டு போக முடியாதா, டாக்டர்?"
என்றார்.
பதினைந்து நாட்களுக்குப் பின் கீதா மாடியில்
அமர்ந்து ... "அம்மா.. என் புருஷன்
என்னை விட்டுப் போயி ஆறு வருஷம்
ஆச்சு. வாழ வழி தெரியாம ஒரு
வாடகைத் தாயாகி குழந்தையும் பெத்துக்
கொடுத்தாச்சு.....இன்னமே எனக்கு வாழ்க்கையிலே என்னம்மா இருக்கு? ஏம்மா, நான் பெத்த
பிள்ளை என்னிக்காவது என்னை ஞாபகம் வெச்சுப்பானா?"
"கீதா. பேசாம அலட்டிக்காம
கீழே வா. ஆறு மணிக்கு
டி வீ லே "பாச
மலர்" சீரியல் இருக்கு... பார்க்கலாம்."
அவள்
நெஞ்சம் கனத்தது.
கிடைத்த ஐந்து லட்ச
ரூபாயில் ஒரு பகுதியில் வாங்கிய
புது கலர் டி வீ யில்
'பாச மலர்" சீரியல் அவர்களை இழுத்தது.
No comments:
Post a Comment