அரங்கத்தான் திருமேனி துயிலுறங்கத் தான்
அஞ்சுதலை ஆதிசேடன் குடைப் பிடித்தான் !
அன்னை இலக்குமியும் அடி போற்றத்தான்
அரங்கத்தான் தாள் அகிலமெல்லாம் காப்பு. !
ஆதவன் சுடரெல்லாம் கார்மேனி கவர்ந்திருக்க
அங்கமெல்லாம் புதுநிலவாய்ப் பொலிந்திருக்க
அரக்கன்தம்பி ஆள்திசைக்கும் அருள்கிடைக்க
அலையாழி துயில் செய்யும் அரங்கத்தான் காப்பு !
விண்ணவரும் மன்னவரும் கண்விழியில் காத்திருக்க
வேதமுடன் பாசுரங்கள் விண்வெளியில் ஒலித்திருக்க
விழிகாண ஆவினங்கள் விருப்பமுடன் காத்திருக்க
விழிமூடி விளையாடும் வைகுந்தன் அருள்காப்பு !
துயிலுறங்கும் தூயவன் நினைவெல்லாம்
துயர்துடைக்கச் சென்றதுவோ அகிலமெல்லாம்?
தூங்காமல் தூங்குகின்ற தோற்றமுற்றான்
துளசி மாலையணி துவாரகையான் திருக்காப்பு! !
ஆழ்வார்கள் சாசனங்கள் அவன் கேட்டும்
அமர்ந்திடவே ஆசனங்கள் ஏற்கவில்லை !
காவிரிக் கருணையில் கழனிப்பாசனம் போல்
காதல் கொண்டோருக்குக் கண்ணன் காப்பு !
நீலக்கடலிலே நீண்ட சேஷத்திலே
நித்திரை காட்டும் முத்திரை மோனத்திலே
நீர்மேகக் கண்ணனவன் பாதத்தையே
நினைத்தவருக்கெல்லாம் அருட்காப்பு !
No comments:
Post a Comment