Friday, December 18, 2015

Margazhi Manalan (Poems in Tamil on Krishna) மார்கழி மணாளன்


மார்கழி மணாளன்

திருக்காப்பு 

வாழிய வாழிய வலக்கை சக்கரம்
வாழிய வாழிய மலர்க்கை சங்கம்
வாழிய வாழிய துளசி மோகனன்
வாழிய வாழிய மார்கழி மணாளன் !
 
வண்ணங்கள் ஆயிரம் கண்களில் துள்ளும்
கண்ணனின் நினைவில் காலங்கள் வெல்லும்
விண்ணவர் அனைவரும் வாழ்த்திடும் வகையில்
வைகறை நித்தம் மங்கலம் மலர்ந்திடும்
 
திருவருள் பொங்கிடும்  திருவடி சரணம்
பொன்னிரு பாதம்  இன்னுயிர் காக்கும்
கண்ணிரு விழியில் கண்ணனை வைத்தால்
கருத்தில் காரிருள் நீங்கிக் கதிரொளி வீசும் !
 
பூவிரித்  தாமரை பொற்பதச் செல்வி
பூரணன் நெஞ்சினில் நித்தம் வேள்வி !
போதுமென்ற மனம் புகுந்திட வருவாள்
போதாதவர்க்குப் பொன்னும்  தருவாள் !
 
அரங்கனின்  அயர்வினை நீக்கிடும் காலை
ஆலயம் நெஞ்சினில் அமைந்திடும் வேளை !
மார்கழிக் காலையில் மாதவன் போற்றி
மங்கலம் தங்கிட வாழ்வினில் வெற்றி !
 
 

 

 

 
 

 

 

No comments:

Post a Comment