Saturday, August 13, 2016

கற்றல் - ஒரு ஆற்றல்

கற்றல் - ஒரு ஆற்றல் (1)

கற்றல் - சில பார்வைகள்

“கற்றது கைமண்ணளவு. கல்லாதது உலகளவு” ..-

 இது அவ்வையின் அறிவுரை. "அவங்களுக்கென்ன சொல்லிட்டுப்  போயிட்டாங்க.. இது என்ன முடியற காரியமா?" அலுத்துக்கொள்ளும் பல நெஞ்சங்கள்.

உனக்கு படிக்க டியூஷன் செலவு பண்ணியே நான் போண்டியாயிட்டேன். நீ பேசாமே படிக்கிறதை விட்டுவிட்டு மாடு மேய்க்க போகலாம்" என அலுத்துகொள்ளும் தந்தை..

 "அப்போ மாடு மேய்க்கிறதுக்கு மூளை வேண்டாமா?" என இடக்காகக்   கேட்கும் மகன்.

என் பையன் உங்களை மாதிரித்தானே இருப்பான்.  சட்டியிலே இருப்பது தானே அகப்பையில் வரும் " எனக்  கேலி செய்யும் தாய்..

"உனக்குப் பாடம் சொல்லிக் கொடுப்பதை விட இந்த மரத்திலே போய் முட்டிக்கலாம்" என செய்யப்போகாத ஒரு செயலை செய்வதாகச் சொல்லிக்கொள்ளும் ஒரு ஆசிரியர்.

 இவர்களுக்கு நடுவே ஒரு விந்தைப் பொருளாக மாணவன். ,,

"நான் எவ்வளவோ முயற்சி செய்து பார்த்துவிட்டேன். மண்டையிலே ஏற மாட்டேங்கறது சார் ...  இதையெல்லாம் எவன்தான் கண்டுபிடித்தானோ, அவனுக்கு மட்டும் இந்த மூளை எப்படி வேலை பார்த்தது?." சோர்வுடன் கேட்கும் மாணவர்கள்.

இந்த மூளை தான் என்ன?. இறைவன் கொடுத்த வரமா? அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாக இருக்கிறதா? அதற்க்கும் சாதி மத பேத பாவங்கள் உண்டா? பணக்காரனின் மூளையும் ஏழையின் மூளையும் வித்தியாசப்பட்டதா? ஆண்களின் மூளையும் பெண்களின் மூளையும் ஒரே மாதிரித்தான் உள்ளதா? அவர்களின் சிந்தனையின் வடிவங்களில் மாற்றங்கள் இருக்கின்றதா?

நன்றாகப் படித்து விட்டு தேர்வில் உட்காரும் மாணவனுக்கு அங்கு சென்ற உடனேயே எல்லாம் ஏன் மறந்து போகின்றது? நம்முடைய கற்றல் என்ற செயல் எப்போது ஆரம்பிக்கின்றது?

கேள்விகள் ஆயிரம்...!!

இவைகளுக்கெல்லாம் பதில் எங்கே இருக்கின்றது? இவைகளைப் பற்றி என்ன ஆராய்ச்சிகள் நடந்திருக்கின்றன? இந்தத் தொடரின் நோக்கம் இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தேடி அறிந்து கொள்வதுதான்?

கற்றல் ஒரு ஆற்றல்..... இது எப்போது தொடங்குதின்றது?

ஒரு முறை ஒரு தாய் ஓர் ஜென் துறவியைக் காணச் செல்கின்றார். " குருவே.. என் குழந்தைக்குக் கற்றுக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும் எப்போது தொடங்கலாம்? " என்று வினவுகின்றார்.

அந்த குரு அவளிடம் கேட்கிறார் " உன் குழந்தைக்கு என்ன வயதாகின்றது?" என்று.

:" குருவே. என் குழந்தை பிறந்து ஐந்து மாதங்களே ஆகின்றன."

"அப்படியா? ஏற்கனவே நீ பதினான்கு மாதங்கள் கால தாமதம் செய்து விட்டாயே."  என  பதிலளிக்கிறார்.

அப்படியென்றால் ஒரு குழந்தை கருவில் இருக்கும் போதே கற்றுக்கொள்ள ஆரம்பிக்கிறதா? இதைப் பற்றி விஞ்ஞான ஆராய்ச்சிகள் என்ன சொல்லுகின்றன?

நம்முடைய புராணங்களில் அபிமன்யுவைப் பற்றியும் பிரகலாதனைப் பற்றியும் சொல்லப்பட்டது கட்டுக் கதையா? அதில் சிறிதளவேனும் உண்மை இருக்குமா,  என்றெல்லாம் கேள்விகள் எழும்புகின்றன.



இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் சர் வின்ஸ்டன் சர்ச்சில் தன் இளம் பிராயத்திலே சொன்னாராம் " நான் கற்றுக் கொள்ள விரும்புகிறேன் . ஆனால் கற்பிக்கப் படுவதை வெறுக்கிறேன்" என்று.

நம்முடைய மாணவர்களில் எத்தனை பேர் சர்ச்சில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்கின்றார்கள்? அவர்களால் சர்ச்சில் போல வாழ்க்கையில் முன்னேற முடியுமாஅவர்கள் எப்படி கற்றிக்கொள்கின்றனர்?

கல்வி என்பது ஒரு மாணவனை ஏதாவது ஒரு தெருவினில் வெற்றிபெறச் செய்வதா? அறிவு என்பது வெறும் புத்தக அறிவா? ஒரு தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு அதற்க்கு நிகரான அறிவு நிச்சயம் இருக்கின்றதா? பள்ளிக்குச்செல்லாத நம் முன்னோர்கள் எவ்வாறு  அறிவிலும் திறனிலும் மேம்பட்டு இருந்தனர்?

இப்படி பல கேள்விகள் நம் மனிதினில் அடிக்கடி தோன்றுகின்றன. இவற்றிக்கு அறிவு பூர்வமாகவும் அறிவில்யல் மூலமாகவும் என்ன பதில்கள் கிடைக்கின்றன ?

தொடரின் அடுத்த பகுதியில் பார்ப்போம்.!








கற்றல் - ஒரு ஆற்றல்   (2)

கருவும் கற்றலும் - சில உண்மைகள்

தாயின் வயற்றில் கருவாக இருக்கும் பொழுதே கற்றல் என்ற செயல் ஆரம்பித்து விடுகிறதா என்பதை பல நாடுகளிலே ஆராய்ச்சி செய்து வருகின்றனர். ஒரு தாய் கருவுற்ற எட்டாம் வாரத்திலிருந்தே வெளிச் சூழ்நிலைக்கு ஏற்ப அந்தக் கருவின் அசைவுகள் இருப்பதாக மனோதத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகின்றனர்.

இதைப் பற்றி ஆராய்ச்சி செய்ய பல நாடுகளில் கருவாக இருக்கும் நிலையில் கற்றல்- புரிதல் பற்றிய ஆராய்ச்சி செய்ய தனியான மையங்கள் அமைக்கப் பட்டுள்ளன   (Department of pre-natal Cognitive Psychology )

டேவிட் சம்பெர்லைன்  என்ற மனோ தத்துவ விஞ்ஞானி கூறுகின்றார். " ஒரு சமுதாயத்தில் வன்முறைகளைப் பின்பற்றுவோர்களுடைய  செயல்களை அவர்கள் கருவில் இருக்கும் போது போதிய ஊட்டச்சக்திகள் இல்லாமை, கவனக்குறைவுகள் மற்றும் வளர்ந்த குடும்பச் சூழ்நிலைகளின் அடிப்படியில் ஊகிக்கமுடியும் "

மேலும் இளம் பிராயத்தில் பெற்றோர்களோடு பாசமின்மை, பெற்றோர்களை விட்டுப் பிரிந்து இருத்தல் போன்ற காரணங்களால் இவற்றை நாம் அறிய முடியும் என்றும் விளக்குகின்றார்.

தன்னுடைய தாயாரின் குரலை ஒரு கரு கிட்டத்தட்ட பதினாறு வாரங்களில் அடையாளம் கண்டு கொள்கிறது இருபத்தி ஏழாவது வாரத்தில் குழந்தையின் பிரதிபலிப்புக்கள்  தாயின் குரலின் குணாதிசயங்களை உணர்ந்து வெளிப்படுத்துவதாக இருக்கின்றது. அது மட்டுமல்ல, அந்தக் கரு தன் தாயின் உணர்வு   நிலைகளையும் (emotional state ) அடையாளம் கண்டு கொள்கிறது.

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆராய்ச்சியில் கருவாக இருந்த நிலையில் தாய் பார்த்த ஒரு ஹாலிவுட் படத்தின் சப்தங்களையும் குரல்களையும் கேட்ட குழந்தை, பிறந்து சில வாரங்களில் அதே படத்தை போட்டபொழுது கருவில் காட்டிய அதே அசைவுகளைக் கட்டுவதாகவும் கண்டுபிடிக்கப் பட்டது.

சாரா பில்லே என்ற ஓர் விஞ்ஞானி தனது ஆராய்ச்சியின் அடிப்படையில் கருவாக இருக்கும் பொழுது மூளையில் வளர்ச்சி  பெற்றோர்களின் மனநிலை மற்றும் உணர்வு நிலைகளால் அதிகம் பாதிக்கப் படுகிறது என்று கூறுகின்றார்அன்பான, அமைதியான சூழ்நிலைகளில் வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சி மிகச் சிறப்பாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.

ஆகவே, கற்றல் என்ற ஒரு செயல் கருவுற்ற காலம் முதல்  துவங்குகின்றது.

கருத்தரித்த காலத்தில் ஒரு தாய் படும் வேதனைகளும் துயரங்களும் குழந்தையின் மூளை வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. குறைவான மூளை வளர்ச்சி, வயதுக்கு தகுந்த அளவு மூளை வளர்ச்சி இல்லாமல் இருத்தல், மூளைக் கோளாறுகள் போன்றவைகளை கருத்தரித்த காலத்தில்  நடந்த நிகழ்சிகளோடு இணைத்து பரிசீலிக்க வேண்டும் என்றும் விஞ் ஞானிகள் கூறுகின்றனர்.

அதே போல, பெற்றோரிடமிருந்து சில திறன்களையும் குழந்தைகள் கற்றுக் கொள்ளுகின்றனர். கருவுற்ற காலத்தில் இசை போன்ற பல கலைகளில் நாட்டம்  உடையவர்களுடைய குழந்தைகளைக்கு மூளை வளரும் நேரத்திலேயே இதில் ஈடுபாடு ஏற்படுவதாகவும் ஆகவே பிறந்த பின் அவற்றில் சுலபமாக நாட்டம் ஏற்பட்டு விடுவதாகவும் சொல்லுகின்றனர்.

ஆகவே, மகளிருக்கு கருவுறும் காலம் மிகவும் கவனமாக இருக்க வேண்டிய காலம். ஒரு சந்ததியின் தலை எழுத்தை நிர்ணயிக்கத் தயாராகும் காலம்.

பல கருவிகள் மூலம் தாயின் வயிற்றில் ஒரு கரு காட்டும் உணர்வுகள் படம் பிடிக்கப் பட்டிருக்கின்றன. கருவாக இருக்கும் நிலையிலேயே  முகத்தில் உணர்வுகளைக் காட்டும் குழந்தைகளின் படங்களைக் கண்டால் அந்த நிலையைப் பேணிப் பராமரிக்கும் தேவையை நாம் உணர முடிகின்றது .

ஆகவே, பெற்றோர்கள் குழந்தை உருவாகும் நிலையில் அன்பு, அமைதி மற்றும் ஆக்கபூர்வமான சூழ்நிலை உருவாக்குதல் மிக அவசியம்.



கற்றல் - ஒரு ஆற்றல்   (3)

மூளை - ஒரு உன்னதமான படைப்பு

ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு விசித்திரமான படைப்பு. எப்படி ஒருவனுடைய கைரேகைகள் அவனுக்கே உரித்தானதாக இருக்கின்றதோ அதே போல் தான் ஒவ்வொரு மனிதனுடைய மூளையும் ஒரு தனித்துவம் வாய்ந்தது. ஆகவே ஒருவரைப் போல மற்றவர்கள் சிந்திப்பதோ, இல்லை கற்பதோ இயற்கையில் நடப்பதில்லை.

ஒரு தனி மனிதனுடைய மூளை அவன் பிறப்பு மற்றும் சூழ்நிலைகளால் பாதிக்கப்படுவதால். ஒவ்வொரு மனிதனுடைய சிந்திக்கும் திறனும் முறைகளும் ஒரு தனி வரைபடமாக அமைகின்றது .(cognitive map ) . நம்முடைய பார்வைகள் மூளையால் அலசப்பட்டு அதற்கு ஒரு அர்த்தத்தை உருவாக்கும் செயல் ( meaning making )  மிகவும்  திறன் வாய்ந்த செயல். இதைச்  செய்வதற்கு மூளையின் பல பாகங்கள் ஒருங்கிணைந்தவாறு செயல்படுகின்றன. ஆகவே, ஒரே பொருளை இருவர் நோக்கும் பொது அதன் அர்த்தங்கள் வேறு வேறாக இருக்க வாய்ப்புண்டு. இதனுடைய தாக்கம் கற்றலில் அதிகமாக ஏற்படுகின்றது. ஆகவே ஒவ்வொருவருக்கும் கற்கும் திறன், ஆழம், முறை மற்றும் அவர்களின் அர்த்தங்கள் மாறுபட்டிருக்கும்.உதாரணமாக ஒரு விபத்தை இருவர் நோக்கினால் இருவருடைய பார்வைகளும், சிந்தனையும் அதன் பாதிப்பால் ஏற்படும் செயல்களும் வேறாக இருக்க அதிக வாய்ப்புண்டு.

மனிதனுடைய இந்த மூளை மற்ற பிராணிகளின் மூளையிலிருந்து எவ்வாறு மாறுபடுகின்றது?

ஒரு மனிதனுடைய மூளை வளர்ச்சியடைந்த நிலையில் சுமார் 1300-1400 கிராம் எடை உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர், இதற்க்கு மாறாக ஒரு கொரில்லா குரங்கின் மூளை சுமார் 450 கிராமும் ஒரு டால்பின் மீனுடைய எடை 1800 கிராமும் ஒரு திமிங்கலத்தின் மூளையின் எடை 7800 கிராமாகவும் இருப்பதாக விஞ்ஞானப் பரிசோதனைககளால் அறிய முடிகின்றது..

நம்முடைய மூளை எதனால் ஆனது? இது சுமார் 78 விழுக்காடு தண்ணீராலும் 10 விழுக்காடு கொழுப்புச் சத்துக்களாலும், 8 விழுக்காடு ப்ரோடீன்களாலும் ஆனது என்று விஞ்ஞான சோதனைகளால் கண்டறியப்பட்டுள்ளது. இந்த மூளையின் எடையும் வடிவும் ஒவ்வொரு மனிதருக்கும் சிறிதளவில் மாறுபட்டிருக்கக் கூடும்.

ஒவ்வொரு மனிதனுடைய விருப்பு வெறுப்புகளும், ஈடுபாடுகளும், ஆர்வங்களும் மாறுபட்டு இருக்கின்றன. இதை நாம் புரிந்துகொண்டால் நம்மில் பலர் ஏன் ஒருமித்த கருத்துடையவராக இல்லை என்பதை நன்கு உணரலாம். மற்றும் ஏன் ஒவ்வொரு மாணவனின் செயல்பாடுகளும் கற்பனைத் திறன்களும் கற்றலும் மாறுபடுகின்றது என்பதையும் உணர முடியும்.

ஆகவே, ஒரு வீட்டில் குழந்தைகளைப் பார்த்து பெற்றோரும், பள்ளியில் மாணவனைப் பார்த்து ஆசிர்யர்களும் "அவன் எப்படிப் படிக்கிறான் பார். நீ ஏன் அவனைப் போல் படிக்க மாட்டேன் என்கிறாய் " என்று வாதிடுவது அறியாமையின் அறிகுறி.

ஜான் மெடினா என்ற உலகப் புகழ் வாய்ந்த மூளை நரம்பியல் பேராசிரியர் கூறுகின்றார்." எவ்வாறு ஒரு பெரிய இசைக் கச்சேரியில் பல இசைக் கருவிகள் ஒருங்கிணைந்து வாசிகின்றதோ, அது போல நமது மூளையின் பல பாகங்கள் எப்பொழுதும் ஒன்றாக இணைந்து செயல் படுகின்றன. சொல்லப்போனால் நமது மூளையின் உள்ளே ஒரு இசைக் கச்சேரி எப்போதும் நடந்து கொண்டிருக்கின்றது."

இந்த இசைக் கச்சேரியில் நமது பங்கு என்ன? இந்தக் கச்சேரியின் நடுவில் நாம் இடைத் தரகர்களாகி  பாடல்களின் போக்கை மாற்ற முடியுமா? போகப் போக நமக்குப் புரியும்....



கற்றல் - ஒரு ஆற்றல்   (4)
மூளையும் உடல் பயிற்ச்சியும்

மூளையின் வளர்ச்சியைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் சில விஞ்ஞானிகள் (Developmental  Biologists) மூளை வளர்ச்சியின் போது அதில் அடிப்படியாக இருந்த உணர்வு பயம் என்று. வாதிடுகின்றனர்தட்ப வெட்ப சூழ்நிலைகளிலிருந்து தன்னை பாதுகாத்துக் கொள்ள முயன்ற போது பிறந்த ஒரு உணர்வே பயம். "சர்வைவல் இன்ஸ்டிங்கட்" என்று சொல்லப்படும் இந்த பாதுகாப்புப் போராட்டம் ஒவ்வொரு நிலையிலும் அதன் வளர்ச்சியை முன்நிறுத்திக்கொண்டு கொண்டு பயத்திற்கு இரையானது.

மூளையின் வளர்ச்சிப் பாதையில் நடந்த ஒரு முக்கியமான திருப்பம் .. நான்கு கால்களால் நடப்பதை விட்டு உயிரினங்கள் (மனித இனம்) இரண்டு கால்களால் மட்டும் நடக்கத் துவங்கியது. இந்த நிகழ்ச்சியினால் மனித இனத்திற்கு இரண்டு கைகள் மற்ற வேலைகளுக்காக விடுபட்டதுமட்டுமன்றி நடக்கும் செயலுக்கு தேவையான சக்தியின் தேவையும் குறைந்தது. இதனால் மூளைக்கு தேவையான அதிக சக்தி கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது.  

ஜான் மெடீனா என்ற ஆராய்ச்சியாளர் கூறுகின்றார் -" ஓர் சராசரி மனிதனின் உடல் எடையில் 2 விழுக்காடே உள்ள மூளை அவன் உட்கொள்ளும் சக்தியின் 20 விழுக்காடுகளை பெற்றுக்கொள்ளுகிறது"

தற்போதைய நிலையில் இருக்கின்ற மனித மூளை உருவாவதற்கு இயற்கையின் வளர்சிக்காலக் கோட்டில் பல லட்சம் ஆண்டுகள் கடந்திருக்கின்றன. ஆகவே, இதை மனித இனம் மூளையை  இயற்கையிலிருந்து தங்களுக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய பரிசாகக் கொள்ளவேண்டும்.

மூளை நமக்கு கொடுக்கும் தகவல் தான் என்ன? அதை நாம் அறிந்தால் மிக ஆச்சரியத்தில் ஆழ்ந்து விடுவோம்.

"என்னை உபயோகப் படுத்து அல்லது இழந்து விடு" என்பதுதான். (Use it or lose it). எவ்வளவுக்கு எவ்வளவு இந்த மூளையை நாம் உபயோகப் படுத்துகிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அது அதிகம்  வேகமாகவும் திறமையுடனும் வேலை செய்கின்றது.  "கத்தியை தீட்டாதே, உந்தன் புத்தியைத் தீட்டு." என்று கவிஞர் சொன்னது உண்மைதானே?”

ஆராய்ச்சியில் அறியப்பட்ட மற்றொரு உண்மை - "முற்காலத்தில் மனிதன் தேவைகளுக்காக காடு மேடுகளில் தேடி அலைந்தான். இந்தத் தேடுதலில் சராசரியாக ஒரு மனிதன் ஒரு நாளுக்கு 12 மைல் தூரம் நடந்தான். அவன் அதிகம் நடக்க நடக்க அவனுடைய மூளைக்குத் தேவையான இரத்தப் ஓட்டமும்  சக்தியும் கிடைத்தன. அதனால் அதன் வளர்ச்சியின் முன்னேற்றம் நன்கு பெருகியது." . இது உடலுக்கும் மூளைக்கும் இருக்கின்ற நெருங்கிய உறவை வெளிப்படுத்துகின்றது. ஆகவே நடை, உடல் பயிற்சி, மற்றும் உடல் உழைப்பு மூளையின் நலனைப் பாதுகாப்பதில்  மிக்க பயனுள்ளதாகும்.

சிறு வயது முதல் கொண்டு குழந்தைகளை விளையாட்டிலும் உடல் பயிற்சியிலும் ஈடுபடுத்துதல் மிகவும் அவசியம்மாலையிலே சற்று நேரம்  சிறுவர்கள் விளையாடுவதால் அவர்களுடைய படிப்பின் தரம் குறையும் என்றோ அல்லது அதனால் நேரம் வீணாகிறது என்றோ பெற்றோர்கள் நினைத்தால் மிகப் பெரிய தவறு. மாறாக உடல் பயிற்ச்சியும் விளையாட்டுக்களும் அவர்களுடைய கற்கும் திறனை வேகப்படுத்துகிறது மற்றும் அதிகரிக்கிறது என்பது ஆராய்ச்சி கண்ட உண்மை.    

உடல் பயிற்ச்சியிலும் உடல் உழைப்பிலும் ஈடுபடாதவர்களுடைய கற்கும் திறனையும் அதில் ஈடுபடுபவர்களுடைய கற்கும் திறனையும் சோதித்துப் பார்த்ததில் மிக அதிகமான அளவில் உடல் பயிற்சி செய்வோரின் கற்கும் திறன் அதிகமாக இருந்தது. அது மட்டுமல்ல, உடல் பயிற்சி செய்வோரின் சிந்தனைத் திறனின் பல வடிவங்கள் சிறப்பாக இருந்தன. உதாரணமாக அவர்கள் ஒரு விஷயத்தை அணுகும் முறை, (approach) அதை ஆராய்ந்து  அறியும் திறன், (analytical skills) கவனம் (attention), மற்றும் முடிவு எடுக்கும் திறன் (decision making  skills)  ஆகியவை மற்றவர்களைக் காட்டிலும் மிகச் சிறப்பாக இருக்கின்றன.

"ஓடி விளையாடு பாப்பா, நீ ஒரு பொழுதும் ஒய்ந்திருக்கலாகத்து பாப்பா" என்ற பாரதியின் பாட்டில் எத்தனை உண்மை உள்ளது? நாமும் நம் குழந்தைகளை கொஞ்சம் விளையாட விடுவோமே !


  
கற்றல் - ஒரு ஆற்றல்   (5)

தாயும் சேயும் - சில கற்றல் பரிமாணங்கள்

கற்றல் என்ற செயல்  கருவிலேயே வித்திடப்படுகிறது என்பதை நாம் அறிந்தோம்ஆனால் ஒரு குழந்தை தன்  தாயின் தொப்பிள் கொடியிலிருந்து விடுபட்டு இந்தப் பரந்த உலகை சந்திக்கும் செயல் மிகவும் உணர்ச்சி பூர்வமான மன அழுத்தம் கொடுக்கின்ற ஒரு நிகழ்ச்சி. தன் தாயின் முழுப் பாதுகாப்பிலிருந்த ஒரு குழந்தை தான் முன் அறியாத ஒரு உலகில் காலெடுத்து வைக்கின்ற செயல் குழந்தைக்கு பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகின்ற ஒரு செயல். மன வல்லுனர்கள் இதை ஒரு அறிந்த உலகிலிருந்து அறியாத உலகிற்கு செல்லும் பயணம் என்று சொல்வார்கள். ( Journey from known to the unknown) .
பிறக்கின்ற ஒவ்வொரு குழந்தையும் முதலில் தேடுவது பாதுகாப்பான சூழ்நிலைதான். இதை ஏற்படுத்துவதில் தாய்க்கு அளவற்ற பொறுப்பு உண்டு. தாயின் அரவணைப்பில் அந்தக் குழந்தைக்கு பாதுகாப்பிற்கான ஒரு செய்தி கிடைக்கின்றது. ஆகவே பிறந்த சில நாட்கள் வரை தாயின் அரவணைப்பு
குழந்தைக்கு இன்றியமையாதது.

தாயின் குரல், உணர்வுகள் இவற்றோடு பல மாதங்கள் பழகிவிட்ட குழந்தைக்கு அதைத் தவிர மற்றவை அனைத்தும் ஒரு சந்தேகத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்தக்கூடிய நிகழ்வுகள். ஆகவே கருவில் கற்ற  ஒலி  வடிவங்கள், உணர்வுசார் அசைவுகள் குழந்தையின் நினைவில் (memory) இருப்பதால் தாயிடம் குழந்தை பாதுகாப்பின்  குறியீடுகளை அறிந்துகொள்கிறது.

தாய்க்கும் சேய்க்கும் பிறந்த சில மாதங்களில் இருக்கும் உறவுகள் பற்றி மனவல்லுனர்களால் பலவித ஆராய்சிகள் செய்யப்பட்டுள்ளன. தன் குழந்தையுடன் எவ்வாறு தாய் அதிக நேரம் செலவிட வேண்டும் எப்படியெல்லாம் உறவாட வேண்டும் என்று  வல்லுனர்கள் விளக்குகின்றனர்.

சில உதாரணங்களை நாம் இங்கு சொல்லலாம். "கண்ணோடு கண் நோக்கின் " என்று சொல்வதுபோல் குழந்தையின்  கண்களோடு உறவாடுதல் மிக அவசியம். (Visual Engagement ). இது குழந்தைக்கு பயத்தை நீக்குவது மட்டுமின்றி  தன்னம்பிக்கையை வளர்பதற்கும் அவசியம் என்று சொல்லபடுகின்றது. மேலும் தாயின் முகத்தில்  காணும் உணர்வுகளைக் குழந்தை அறிந்து பழக்கப் படுத்திக் கொள்ளுகின்றது. ஆகவே "முகம் பார்த்து சிரித்தல்" என்பது உறவாடும் கலையின் முதல் படி. (Relationship management ).

இரண்டாவதாக தாய் தன குழந்தையுடன் பேசுதல் அவசியம். "தாயின் மொழி தாய் மொழி' .தாயின் உதடுகளின் அசைவுகளைப் பார்க்கின்ற குழந்தையின் மனத்தில் அந்த அசைவுகள் ஆழமாகப் பதிகின்றன இதை கேட்கின்ற குழந்தையின் மனத்தில்  உதடுகளின் அசைவும் ஒலி அலைகளின் பதிவும் ஒன்று சேர்ந்து பதியும் நேரத்தில் கற்றல் என்ற நிகழ்வின் வாசல் கதவுகள் திறக்கப் படுகின்றன.

மூன்றவதாக தாயின் கொஞ்சல் குழந்தையின் உணர்வுகளை மகிழ்விக்கின்றன. இதன் மூலமாக தாயின் உணர்வுகளுக்கும் குழந்தையின் உணர்வுகளுக்கும் இடையே ஒரு பாலம் அமைக்கப் படுகின்றது. (emotional bonding) இது உறவினை உறுதிப் படுத்தி தாயிடம் மீண்டும் எதிர்பார்ப்புக்களை ஏற்படுத்தி கற்றலுக்கான ஆர்வத்தை  (curiosity to learn ) அதிகரிக்கின்றது.

இதனால் குழந்தையின் 'அறிதல் -புரிதல் " (cognition -understanding) செயல்களுக்கு ஓர் நல்ல ஆரம்பம் கிடைக்கிறது.

குழந்தை பிறந்த முதல் மூன்று மாதங்களில் அதன் தேடுதல் வேட்டை தொடங்கி விடுகின்றது. (Exploration). சில மன வல்லுனர்கள் விளையாட்டாக இதை ஒரு மலை ஏறும் பயிற்சிக்கு ஈடானது என்று சொல்கிறார்கள். (Adventure seeking). குழந்தையின் கண்களின் பார்வை செல்லும் இடங்கள், கைகளும் விரல்களும் அசையும் முறைகள் இவற்றை உற்று நோக்கினால் அந்தக் குழந்தையின் தேடுதல் வேட்டையின்  தீவிரத்தை நாம் அறிந்து கொள்ளலாம்.

இந்த தேடுதல் வேட்டையை நாமும் பின்தொடர்வோம்.






No comments:

Post a Comment