Monday, November 7, 2016

ஆறுபடை வீடு (3) – திருச்சீரலைவாய் (திருச்செந்தூர்)

க. பாலசுப்பிரமணியன்
tr3
அளவில்லாக் கருணை கந்தனின் விழிகள்
அறியாத சூரனின் அகந்தையின்  வேர்கள்
ஆணவத்தில் எழுந்தன அழிவினைத் தேடி
அலைவாய்க் கரையில் ஊழ்வினை நாடி !

ஓமென ஓமென உயர்ந்தன அலைகள்
ஒருதலை இருதலை மறுதலை மடிய
தறுதலை ஆணவம் தரணியில் வீழ
ஆறுதலை முருகன் அருளும் வெல்ல !

மாயைகள் அனைத்தும் மண்ணில் வீழ்ந்தது
மாலனின் மருகன் மனமே வென்றது
காலனின் அணைப்பில் சூரனும் கதற
வேலவன் ஆற்றலை  வானகம் புகழ்ந்தது

கூரிய வேலும் கொடியவன் கூறிட
கூவியே வந்தது கொடியினில் சேவலும்
குமரனைச் சுமந்திடஅகவியே  மயிலும்
குவலயம் மகிழ்ந்திடகந்தனின் தரிசனம் !

சமரினை முடித்த சங்கரன் மகனும்
சந்தனம் அணிந்தே சன்னிதி கொண்டான்
தந்தனத்  தோமென தாளங்கள் போட்டு
தாளிணைத் தேடி வந்தன காவடி !

நாழிக் கிணற்றில் அகந்தையைக் கழுவி
நாழிப் பொழுதும் கந்தனைக்  கண்டால்
தாழிட்ட நெஞ்சங்கள் தானாய்த் திறக்கும்
தாளினைப் போற்றியே தரணியில் வாழ்வோம் !

No comments:

Post a Comment