திருமந்திரத்தில் ஒரு மந்திரம் (2)
"தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் " என்று இறைவனின் பெருமையை தந்தைக்கு மட்டுமின்றி, இந்த உலகுக் காட்டியவன் பிரகலாதன்.
ஆனால் மனித மனத்தில் அடிக்கடி எழும் சந்தேகம் “ இறைவன் எந்த வடிவத்தில் இருக்கின்றான்?,
.எந்த இடத்தில் இருக்கின்றான்? அவனை எந்த வடிவத்தில் வழிபட்டால் அவனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டு நமக்கு அருள் புரிவான்? -சந்தேகத்தில் அலைகின்ற மனம் நிலைப்பட மறுக்கின்றது.
"தீக்குள் விரலை விட்டால் நந்தலாலா உன்னைத் தீண்டும் இன்பம் தோன்றுதடா நந்தலாலா"
என பாரதி சொன்னதுபோல், "காணும் இடமெல்லாம் உந்தன் வண்ணம் கண்டேன், அந்த வண்ணத்தை என்னுள்ளும் கண்டேன்"
என்று கபீர்தாஸ் சொன்னதுபோல், திருமூலரின் பாடல்களில் இறைதத்துவத்தின் ஆழத்தைப் பார்க்கிறோம்.
"ஆதியு மாய் அரனாய் உடலுள் நின்ற
வேதியுமாய் விரிந்தார்த் திருந்தான் அருட்
சோதியுமாய்ச் சுருங்காதா தோர் தன்மையுள்
நீதியுமாய் நித்தமாகி நின்றானே.”
(15)
"ஆதியுமாய் அரனுமாய் உடலுள் நின்ற வேதியுமாய் "- என விளக்கம் அளித்து, திருமூலர் சிந்தனையாலும் பார்வையாலும் வேறுபட்டு நிற்கின்ற இறைதத்துவத்தின் ஒருங்கிணைந்த மூலப்பொருளின் நிலையை எடுத்துரைக்கிறார்.
“விரிந்தார்த்திருந்தான்” - என திருமூலர் சொல்லும் பொழுது இறைவனின் உலகளாவிய தன்மையும், இருக்கின்ற உயிர்களிளெல்லாம் அவன் ஆழமாய் அமைந்துள்ள தன்மையையும் உணர முடிகிறது.
அவன் எப்படி இவ்வாறு இருக்க முடியும் என்று நமது மனதில் எழுகின்ற வினாவிற்கு பதில் தரும் வகையில் முனிவர் "அருட்சோதியுமாய்
" என்று சொல்லி நம்மைக் குழப்பங்களிளிருது விடுவிக்கிறார்.
ஒளி மயமாக அவன் இருக்கும் பொழுதில் அந்த ஒளி எல்லா அசையும் அசையாப் பொருட்களிலும் ஊடுருவி நிற்கின்ற நிலை வெளிப்படுகிறது.
“சுருங்காததோர் தன்மை “ என மீண்டும் கூறி, ஒரு முறை அந்த ஒளி நம்மை ஆட்கொண்டால் அது சுருங்காது,
குறையாது,
மாறாது நிலைத்திருக்கும் நிலையைக் காட்டுகின்றார்.
"நீதியுமாய்"
- எனச் சொல்லுகையில் அந்தப் பேரொளியின் பாரபட்சமற்ற குணத்தை வெளிப்படுத்தி நடுநிலைமைப் போக்கை எடுத்துரைக்கின்றார்.
"நித்தமாகி நின்றானே" - என்ற சொல்லாடல் தன் விளக்கங்களுக்கு அவர் முற்றுப் புள்ளி வைப்பதைப் போல், இறைவனின் பேராண்மையையும் இணையற்ற நிலையையும் விளக்குகின்றது.
இன்னொரு பாடலில் "கடந்து நின்றான் எங்கும் கண்டு நின்றானே."
(14) எனத் திருமூலர் சொல்லும் பொழுது இறையாட்சியின் முழுநிலைக்கு ஒரு முகவுரை கிடைக்கின்றது.
தேடும் உள்ளங்களுக்கு தெவிட்டாத இன்பம் தரும் இந்தப் பாடல் திருமந்திரத்தில் இன்னொரு மந்திரம்!
No comments:
Post a Comment